சாந்தே பென்னூர், கர்நாடகா
எடியூரப்பா கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததால் அவர் ஆதரவாளர் ஒருவர் அதிர்ச்சியில் மரணம் அடைந்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் சென்னகிரி மாவட்டத்தில் உள்ளது சாந்தே பென்னூர். இது ஒரு வட்ட தலைநகர் ஆகும். இந்து சென்னபாசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஜகவை சேர்ந்தவரும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பரம ஆதரவாளரும் ஆவார். எடியூரப்பா முதல்வர் ஆனதில் இருந்தே சென்னபாசப்பா மிகவும் மகிழ்வுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் எடியூரப்பாவை உடனடியாக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. அதை ஒட்டி நடந்த சட்டப்பேரவை கூட்ட நேரடி ஒளிபரப்பை தொலைக்காட்சியில் சென்னபாசப்பா பார்த்து வந்தார். எடியூரப்பா உணர்ச்சி பூர்வமாக பேசும் போது கண்ணீருடன் கவனித்து வந்தார். இறுதியில் எடியூரப்பா தான் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்ததும் அதிர்ச்சியில் சென்னபாசப்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மருத்துவமனைக்கு அவரை எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் மரணம் அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் குடும்பத்தினர் கடும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த தகவல் அறிந்த எடியூரப்பாவும் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் இன்று சென்னபாசப்பாவின் குடும்பத்தினரை நேரில் கண்டு தனது ஆறுதலை தெரிவிக்க உள்ளார்.