அகோலா
மூத்த பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா மகாராஷ்டிரா போலீசாரால் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் அகோலாவில் விவசாயிகள் பேரணி நடந்து வருகிறது. அதில் முன்னாள் பாஜக அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவரில் ஒருவருமான யஷ்வந்த் சின்ஹா கலந்துக் கொண்டுள்ளார். அந்தப் பேரணியில் நிகழ்த்திய உரையில் யஷ்வந்த் சின்ஹா விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக அரசு நிறவேற்றவில்லை என கடுமையாக சாடி உள்ளார்.
பேரணியின் ஒரு பகுதியாக நேற்று விவசாயிகள் அகோலா மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த யஷ்வந்த் சின்ஹா தலைமையில் சுமார் 250 விவசாயிகள் சென்றுள்ளனர். அவர்களை மகாராஷ்டிரா போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். அனைவரையும் கலைந்து போகச் சொல்லி உள்ளனர். ஆனால் அதற்கு யஷ்வந்த் சின்ஹாவும் மற்ற விவசாயிகளும் மறுத்துள்ளனர். அதையொட்டி அனைவரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாஜக ஆளும் மாநிலத்தில் ஒரு மூத்த பாஜக தலைவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது மக்களிடையே கடும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இன்று அதே பேரணியில் கலந்துக் கொள்வதாக இருந்த மற்றொரு பாஜக பாராளுமன்ற உறுப்பினரான நானா படோல் கலந்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.