கொல்கத்தா

”நான் கட்சியை விட்டு விலக மாட்டேன், கட்சிக்கு என்னை பிடிக்காவிட்டால் அவர்கள் என்னை நீக்கட்டும்” என யஷ்வந்த் சின்ஹா கூறி உள்ளார்.

பாஜகவின்  முந்தைய அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் நிதி அமைச்சராக பணி புரிந்தவர் யஷ்வந்த் சின்ஹா.   தற்போதைய மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருபவர்.   அவருடைய விமர்சனங்கள் பாஜக வில் கடும் பரபரப்பை உண்டாக்குவது தொடர்கிறது.   சமீபத்தில் ராஷ்டிர மன்ச் என்றொரு அரசியல் அமைப்பை ஆரம்பித்து அரசுக்கு எதிராக போராட்டம் செய்து வருகிறார்.

அவர் நேற்று கொல்கத்தாவில் நடந்த நிதிநிலை அறிக்கை மீதான விவாதக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.   அப்போது, “நான் எதற்கு பாஜகவை விட்டு விலக வேண்டும்?  கடந்த 2004 முதல் 2014 வரை கட்சி வளர்ப்புப் பணியில் முழுமையாக ஈடுபட்டு கட்சியை அரசுக் கட்டிலில் அமர்த்தி இருக்கிறேன்.    கட்சிக்கு என்னை பிடிக்கவில்லையெனில் கட்சி என்னை நீக்கட்டும்.

நான் மத்திய அரசை எதிர்த்து போராடுவதால் கட்சியை விட்டு விலக வேண்டும் என சிலர் கூறுகின்றனர்.   பாஜக தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.   அதற்காக நான் போராட்டங்கள் நிகழ்த்தி வருகிறேன்.   நான் கடந்த 4 ஆண்டுகளாகவே போராடி வருகிறேன்.

நான் எத்தனையோ கடிதங்கள் எழுதியும் மோடி பதில் தரவில்லை.,    அதனால் தான் நான் ராஷ்டிரிய மன்ச் என்னும் அமைப்பை ஆரம்பித்து அதன் மூலம் போராடி வருகிறேன்.  வரும் மார்ச் மாதம் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாய சங்கங்களுடனும், அரசியல் கட்சிகளுடனும் சேர்ந்து போராட உள்ளேன்” என தன் உரையில் யஷ்வந்த் சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.