விதர்பா

ரசு சக்திக்கு எதிராக மக்கள் சக்தி எழ வேண்டும் என முன்னாள் பா ஜ க அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறி உள்ளார்.

முன்னாள் பா ஜ க அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா சமீபத்தில் இந்தியப் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் தான் என தெரிவித்திருந்தார்.   அது நாடெங்கும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது .   அதற்கு எதிராக அவர் மகனும் தற்போதைய பா ஜ க அமைச்சருமான ஜெய் ஷா பதில் அறிக்கை கொடுத்திருந்தார்.   இந்த சர்ச்சை சற்றே ஓய்ந்துள்ள இந்த வேளையில் விதர்பா பகுதியில் நடந்த ஒரு பொது நிகழ்வில் யஷ்வந்த் சின்ஹா கலந்துக் கொண்டுள்ளார்.

அங்கு அவர் பேசுகையில், “இந்த அரசுக்கு எதிரான மக்கள் இயக்கம் விரைவில் துவங்கப்பட வேண்டும்.  இதன் மூலம் அரசு சக்திக்கு எதிராக மக்கள் சக்தி எழ வேண்டும்.   அரசு தரப்பில் நீண்ட உரைகள் நிகழ்த்தப்பட்டு அதிக அளவில் கார்களும் மோட்டார்சைக்கிள்களும் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.  இது தான் நாட்டின் முன்னேற்றமா?

நான் பணமதிப்புக் குறைப்பு பற்றி பேச விரும்பவிலை.  தோல்வி அடைந்த ஒரு விவகாரத்தைப் பற்றி பேசுவதால் என்ன பயனும் இல்லை.   நாம் எதிர்க்கட்சியில் இருந்த போது வரி விதிப்பாளர்களின் ரெய்ட் பற்றி நிறைய விமர்சித்துள்ளோம்.   ஆனால் இப்பொதும் அதே தொடர்கிறது.  ஜி எஸ் டி என்பது நல்ல மற்றும் எளிய வரிவிதிப்பாக இருக்க வேண்டியது.   ஆனால் இப்போது கெடுதலான குழப்பமான வரிவிதிப்பாக உள்ளது.

அரசு ஜி எஸ் டி கொள்கையில் தேவையான மாறுதல்களை உடனடியாக கொண்டுவர வேண்டும்.   எனது மாநிலமான ஜார்க்கண்ட் மாநிலத்தில் விவசாயிகள் என்றும் தற்கொலை செய்துக் கொள்ள மாட்டார்கள் என கூறி வந்தேன்,   ஆனால் அங்கும் சில நாட்களாக விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்கின்றனர்.   இந்த அரசு பற்றியும் பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை பற்றியும் நான் சொன்னது மக்கள் கருத்துத்தான் என்பதை மக்கள் புரிந்துக் கொண்டனர். எனக்கு அது போதும்” என கூறி உள்ளார்.