சென்னை: வங்க கடலில் உருவாகவுள்ள ‘யாஷ்’ புயல் காரணமாக, ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் 23-ந்தேதிக்குள் கரை திரும்ப தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடலில், தென் மேற்கு பருவமழை முன் கூட்டியே இன்று தொடங்க உள்ளது என்றும், 22ந்தேதி (நாளை) வடக்கு அந்தமான் கடல் மற்றும் கிழக்கு மத்திய வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக அதிக வாய்ப்புள்ளதாகவும், பின்னர் இது தீவிரமடைந்து அடுத்த 72 மணி நேரத்தில் புயல் சின்னமாக உருவாகக்கூடும் என்றும், இந்த புயல் சின்னம் வடமேற்காக நகர்ந்து மேற்கு வங்காளம் – ஒடிசா கடற்கரையை 26ந்தேதி சென்றடையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. வடக்கு அந்தமான் கடல் மற்றும் கிழக்கு மத்திய வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில், ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் 23-ந்தேதிக்குள் (ஞாயிற்றுக்கிழமை) கரைக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் அனைவருக்கும் சார்ட்டிலைட் போன், நேவிக், நேவ்டெக்ஸ் ஆகிய தொலைத்தொடர்பு கருவிகள் மூலம் தகவல் தெரிவித்து அவர்கள் 23-ந்தேதிக்குள் கரைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளை மீன்வளத்துறை கமிஷனர் மேற்கொண்டு வருகிறார்.
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள படகுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீனவர்கள் கரைக்கு திரும்புவதை 24 மணிநேரமும் கண்காணிக்கும் பொருட்டு, மீன் வளத்துறை அலுவலகங்களில், 24 மணிநேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. மேலும், ஆழ்கடலில் உள்ள மீன்பிடி படகுகளுக்கு கடலோர காவல்படை மூலம் தகவல் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் பேரிடர் தொடர்பான தகவல்களை பெற மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசிகளில் தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் TNSDMA TWITTER என்ற சமூக வலைத்தளத்தையும், TNSMART என்ற செயலியையும் பொதுமக்கள் தொடர்ந்து கவனிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.