ராமாயணம் இதிகாசம் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நடிகர்களைக் கொண்டு எடுக்கப்பட்டு இன்றளவும் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது.

இந்தியில் அடுத்ததாக நிதேஷ் திவாரி இயக்கி வரும் ராமாயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர்.

ராவணனாக கே.ஜி.எப். படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான கன்னட நடிகர் யாஷ் நடிக்கிறார், அதற்காக அவர் ரூ. 150 கோடி சம்பளம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில், ‘மேட் மேக்ஸ்’ ஸ்டண்ட் இயக்குனர் கை நோரிஸ் (Guy Norris) யாஷ் தொடர்புடைய காட்சிகளுக்கு ஸ்டண்ட் அமைத்திருந்தார்.

இந்த பிரம்மாண்டமான படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, அதில் யாஷ் நீண்ட தாடியுடன் ராவணனின் பிரம்மாண்ட தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார்.

ராமாயன் பார்ட் 1 மற்றும் பார்ட் 2 என்று இரண்டு பகுதிகளாக வெளியாக உள்ள இந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு 2024 நவம்பர் மாதம் வெளியானது.

இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 2025 தீபாவளிக்கு முதல் பாகமும் இரண்டாவது பாகம் 2026 தீபாவளிக்கும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரன்பீர், சாய் பல்லவி மற்றும் யாஷ் தவிர, படத்தில் ஹனுமனாக சன்னி தியோல், சூர்ப்பனகையாக ராகுல் ப்ரீத் சிங், கைகேயியாக லாரா தத்தா, மண்டோதரியாக காஜல் அகர்வால், லட்சுமணனாக ரவி துபே, மந்தாராவாக ஷீபா சத்தா, இந்திர தேவாக குணால் கபூர் மற்றும் கௌசலாயாவாக இந்திரா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அருண் கோவில் – யாஷ்

1987 – 88ம் ஆண்டுகளில் ராமாயணம் தொலைகாட்சித் தொடரில் ராமராக நடித்து புகழ் பெற்ற அருண் கோவில் நிதேஷ் திவாரி இயக்கி வரும் இந்த ராமாயணம் படத்தில் தசரதனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளன.