மழை சீசன், குளிர் சீசன் போல தமிழ்த் திரையுலகுக்கு இது க்ரைம் – த்ரில்லர் சீசன். இந்த ஜானர் படங்கள் வரிசைகட்டி வந்துகொண்டு இருக்கின்றன.

அந்த பட்டியலில் சேர்ந்திருக்கிறது, யாரோ திரைப்படம்.

நாயகன் வெங்கட், சென்னையில் ஒரு தனியார் கட்டிட நிறுவனத்தில் டிசைனராக வேலை பார்க்கிறார். கடற்கரை அருகே பெரிய பங்களாவில் தனி ஆளாக வாழ்ந்து வருகிறார்.

அந்த பங்களாவில் தன்னைத் தவிர யாரோ ஒரு மர்ம நபர் உலவுவதாக பயப்படுகிறார். தனது நண்பனையும் அவர் மூலமாக காவல்துறை அதிகாரியையும் வீட்டுக்கு அழைத்து வருகிறார்.

அவர்கள், பங்களாவில் வேறு யாரும் இல்லை என்கிறார்கள்.

இதற்கிடையே, வேறு ஒரு நண்பர் மூலம், மந்திரவாதியை அழைத்து வருகிறார் வெங்கட். அவர் அதே பங்களாவில் மர்மமாக இறக்கிறார்.

தவிர திடீரென ஒருநாள் வீட்டிற்குள் இருந்து கேமரா ஒன்றை எடுக்கிறார். அந்த வீடியோ கேமராவில், யாரோ ஒரு இளைஞர் ஒரு பெரியவரை கொலை செய்யும் காட்சி பதிவாகி இருக்கிறது.

அந்த கொலையாளி யார், எதற்காக கொலை செய்கிறார் என்பதே மீதிக் கதை.

 

நாயகனாக அறிமுகமாகி இருக்கும் வெங்கட் தயாரிப்பாளராகவும் இருப்பதாலோ என்னவோ, பெரும்பாலான காட்சிகளில் இவர்தான் தோன்றுகிறார். ஆனால் தனிமையில் பயப்படுவது, காதலி மீது ஆத்திரப்படுவது என எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார், ஆகவே உறுத்தவில்லை.

கே.பி.பிரபுவின் ஒளிப்பதிவு ஒரு த்ரில்லருக்கு ஏற்ற வகையில் இருக்கிறது. அதே போல ஃப்ராங்க்ளின் இசையும் பயமுறுத்துகிறது.

மொத்தத்தில் கொஞ்சம் பயப்படுத்தும் த்ரில்லர்… பார்க்கலாம்.