டில்லி

துர்கை சிலைகள் கரைப்பால் யமுனை நதி மிகவும் மாசடைந்துள்ளது.

வருடம் தோறும் துர்கா பூஜை விமரிசையாக நடப்பதும் அந்த சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படுவதும் வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.  இதனால் நதி நீர் மிகவும் மாசடைகிறது.   தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மண்ணினால் செய்த சிலைகளை மட்டுமே நதிகளில் கரைக்க் வேண்டும் என ஆணை இட்டுள்ளது.   ஆனால் நாடெங்கும் விநாயகர் சதுர்த்தியிலும், துர்கா பூஜையிலும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கொண்டும்,  அவற்றில் கடும் ரசாயனம் உள்ள நிறங்களை உபயோகித்தும் சிலைகள் உருவாக்கப் படுகின்றன.

மிகச் சமீபத்தில் விநாயகர் சதுர்த்தியின் போது பிளாஸ்டர் ஆஃப் பாரிசில் செய்யப்பட்ட சிலைகளே அதிகமாக கரைக்கப்பட்டன.   அப்போதே டில்லியில் உள்ள பலரும் இதை எதிர்த்தனர்.   ஆனால் நேற்றும், சனிக்கிழமையும் கரைக்கப்பட்ட துர்கை சிலைகளில் வெகுவானவை அதே போல பிளாஸ்டர் ஆஃப் பாரிசில் செய்யப்பட்ட சிலைகளே ஆகும்.   மண்ணால் செய்யப்படும் சிலைகள் ஆற்றில் கரைந்து விடும்.   ஆனால் இது போன்ற சிலைகள் கரையாது.    இதனால் தற்போது டில்லியில் யமுனை நதி முழுவதுமே சிலைகளின் துகள்கள்,  கண்ணாடி வளையல்கள், உடைக்கப்பட்ட பிளாஸ்டிக் அலங்காரப் பொருட்கள் ஆகியவை மிதந்தவாறு  யமுனை நதி ஒரு குப்பை மேடாகவே காட்சி அளிக்கிறது.

இது குறித்து டில்லியில் வசிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சஞ்சய் உபாத்யாயா, “தலைநகரில் விநாயகர் சிலைகளி விட அதிக அளவில் துர்கை சிலைகள் கரைக்கப் பட்டுள்ளன.  பசுமை தீர்ப்பாயத்தின் ஆணைப்படி மண்ணால் மட்டுமே சிலைகள் செய்யப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளாமல்  பிளாஸ்டர் ஆஃப் பாரிசில் சிலைகள் செய்யப்பட்டுள்ளது.  இதை நதிகளில் கரைக்கக் கூடாது என அரசு தடுக்கவில்லை.  அதற்கான விசாரணையை நடத்த வேண்டும்” என டில்லி டெவலப்மெண்ட் அதாரிட்டி, டில்லி நீர்க் கழகம், டில்லி அரசு மற்றும் டில்லி உயர்நீதி மன்றத்திடம் மனு அளித்துள்ளார்.