டில்லி

தினமும் நகரங்களில் முழுமையாக குப்பைகள்  அள்ளப்படுவதில்லை என அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூய்மை இந்தியா என அறிவிக்கப்பட்டு இந்தியா முழுவதும் தூய்மைப் படுத்தப்படுவதாக அறிக்கைகள் வெளியாகின்றன.  ஆனால் இன்னும் பல நகரங்களில் முழுமையாக குப்பைகள் அள்ளுவதற்கான உபகரணங்கள் இல்லை என்பது அரசின் அறிக்கைகளில் இருந்து தெரிய வருகிறது.   பல நகரங்களில் குப்பை அள்ளும் தொழிலாளர்கள் மற்றும் இயந்திரங்களின் எண்ணிக்கை மிகக் குறைவே.   அதனால் அந்த நகரங்களில் அதிகபட்சமாக 75% குப்பைகள் மட்டுமே அள்ளப்படுகின்றன.

மேலும் பல நகரங்களில் குப்பைகளை அழிக்கவோ மறு சுழற்சி செய்யவோ எந்த ஒரு வசதியும் கிடையாது.   அத்தகைய நகரங்களில் பல இடங்கள் குப்பையை கொட்டும் இடம் என அறிவிக்கப்பட்டு நகரில் அள்ளப்படும் குப்பைகள் அங்கு கொட்டப்படுகின்றன.    சில இடங்களில் குடியிருப்புக்களுக்கு அருகிலேயே இந்த குப்பை கொட்டும் இடங்கள் அமைந்துள்ளன.

தென் இந்தியாவில் பல நகரங்களில் குப்பை அழிக்கப்படும், அல்லது மறு சுழற்சி செய்யப்படும் வசதிகள் உள்ளன.   ஆயினும் அந்த நகரங்களில் முழு அளவில் அவை நடைபெறுவதில்லை.    வட இந்தியாவில் அது போன்ற வசதிகளே இல்லாத நகரங்கள் தான் பெருமளவில் உள்ளன.   நாடெங்கும் உள்ள பல நகராட்சிகளில் வருமானம் மிகவும் குறைவு என்பதால் குப்பைகள் அள்ளும் பணிகளுக்கு செலவழிக்கவும் நிதி இல்லாத நிலை உள்ளது.

மத்திய அரசு குப்பைகளை அழிக்க தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகராட்சிகளுக்கு 35% மட்டுமே நிதி உதவி அளித்து வருகிறது.  ஆனால் பல நகராட்சிகளில் மீதி உள்ள செலவை சமாளிக்கும் அளவுக்கு வருமானம் இருப்பதில்லை.  அரசு மறு சுழற்சி மூலம் குப்பைகளை உரமாக்கி அந்த வருமானத்தில் இந்த செலவை ஈடுகட்டிக் கொள்ளலாம் என மத்திய அரசு கூறி உள்ளது.   ஆனால் அப்படி வரும் வருமானம் வெறும் 14% மட்டுமே என பல நகராட்சி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்த மோடி அரசு அதை முழுமையாக செயல் படுத்த போதுமான நிதி உதவியை ஒதுக்குவதின் மூலமே இந்தியா உண்மையில் தூய்மை ஆகும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.