டெல்லி: யமுனை நதி தனது அபாய கட்டத்தை கடந்து பாய்ந்தோடுகிறது. இதன் காரணமாக கரையோர வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில், பொதுமக்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரவு முழுவதும் பெய்த கனமழைக்குப் பிறகு யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியதால், டெல்லி-என்சிஆரில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. குறிப்பாக டெல்லி-குருகிராம் எல்லையில், நீர்மட்டம் உயர்ந்து வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது மேகவெடிப்புகளும் நிகழ்ந்து, நிலச்சரிவை ஏற்படுத்தி பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், டெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்கு பாயும் யமுனை நதியில் வெள்ளம் ஏற்பட்டது. இதன் டெ ல்லியின் 6 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
யமுனையில், அபாய அளவை கடந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், யமுனை ஓரம் உள்ள 6 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் யமுனை அருகே தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், அங்கு வசித்து வரும் 15,000 பேரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களை வீட்டைவிட்டு வெளியேறி முகாம்களுக்குச் செல்லுமாறு படகுகள் மூலம் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து 1.76 லட்சம் கனஅடி நீரும், வஜிராபாத் அணையிலிருந்து 69,210 கனஅடி மற்றும் ஓக்லா அணையிலிருந்து 73,619 கனஅடி நீரும் யமுனை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை யமுனா நதி அபாயக் குறியான 205.33 மீட்டரைத் தாண்டியதால் டெல்லி ஆழமடையும் வெள்ள அபாயத்தை எதிர்கொள்கிறது, மாலைக்குள் நீர்மட்டம் 206.50 மீட்டரைத் தொடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையில், குருகிராமில் திங்கள்கிழமை வெறும் நான்கு மணி நேரத்தில் 100 மிமீ மழை பெய்தது, இதனால் ஹீரோ ஹோண்டா சௌக் மற்றும் துவாரகா எக்ஸ்பிரஸ்வே போன்ற முக்கிய பகுதிகள் நீரில் மூழ்கின.
இந்த நிலையில், பெய்து வரும மழை காரணமாக, இன்று இரவு 8 மணியளவில் ஆற்றின் நீர் ஓட்டம் 206.41 மீட்டராக உயரக் கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.