திரைப்படங்கள் உருவான காலம் முதல் இன்று வரை அந்த படங்களுக்கு பக்கபலமாக இருந்து வருவது இசை தான்….. காதல், அதிரடி, நகைச்சுவை என எந்த காட்சிகளாக இருந்தாலும் சரி, அவைகளுக்கு மேலும் அழகு சேர்ப்பது இசை என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம்…..அந்த இசையே யுவன்ஷங்கர் ராஜாவின் விரல்களில் இருந்தும், குரலிலும் இருந்தும் தோன்றினால், நிச்சயமாக இசை பிரியர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அளவே இருக்காது…. அப்படி ஒரு திரைப்படமாக தற்போது உருவெடுத்து இருப்பது தான் ‘யாக்கை’.
‘பிரிம் பிச்சர்ஸ்’ முத்துக்குமரன் தயாரிப்பில், இயக்குநர் குழந்தை வேலப்பன் இயக்கி இருக்கும் யாக்கை படத்தில் கிருஷ்ணா மற்றும் சுவாதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, தலைச் சிறந்த கலைஞர்களுள் ஒருவராக திகழ்ந்த கொண்டிருக்கும் பிரகாஷ் ராஜ் மற்றும் ஜோக்கர் புகழ் குரு சோமசுந்தரம் ஆகியோர் இந்த யாக்கை படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மேலும் சிறப்பு.
ஏற்கனவே யுவன்ஷங்கர் ராஜா இசையில், தனுஷ் பாடிய ‘சொல்லி தொலையேன் மா’ பாடலும், சின்மயி – யுவன்ஷங்கர் ராஜா பாடியிருக்கும் ‘நான் இனி காற்றில்…’ பாடலும் இசை பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் இந்த நிலையில், தற்போது யாக்கை படத்தின் பின்னணி இசையையும் யுவன்ஷங்கர் ராஜா நிறைவு செய்திருப்பது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை வானளவு அதிகரித்துள்ளது. இந்த பின்னணி இசையை தொழில் நுட்ப ரீதியாக மேலும் மெருகேற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது…. உயிர் உள்ள ஒரு உடலாக கருதப்படுவது தான் ‘யாக்கை’. விரைவில் தன்னுடைய மெய்மறக்கும் இசையால் அந்த ‘யாக்கை’ க்கு புத்துயிர் அளிக்க இருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா….
இத்திரைப்படத்தை பற்றி இயக்குநரிடம் கேட்டப்போது அவர் கூறியது :-
“ஒரு திரைப்படத்திற்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு இயக்குநராக நான் நன்கு அறிவேன்….அந்த வகையில் யுவன்ஷங்கர் ராஜா சாரின் மெய் மறக்கும் பின்னணி இசை, எங்களின் யாக்கை படத்திற்கு புத்துயிர் கொடுத்திருக்கிறது. வர்த்தக ரீதியாக எங்கள் திரைப்படம் வெற்றி பெற ஆணி வேராக செயல்படுவது அவருடைய இசை தான்…வருகின்ற டிசம்பர் மாதத்தில் நாங்கள் யாக்கை படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்…யாக்கை படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் குழந்தை வேலப்பன்.