சென்னை:
இந்தியாவில் தயாரிப்பு ஆலையை விரிவாக்க சியோமி திட்டமிட்டுள்ளது.
இந்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்டாமர்ட்போன் விற்பனை சந்தையில் பல நிறுவனங்கள் போட்டிப் போட்டு வந்தாலும், சீனாவில் சியோமி நிறுவனம் நீண்ட காலமாகத் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. சமீபத்தில் இந்தியச் சீனா எல்லை பிரச்சனைகள் வந்த போது சியோமி பல விதமான பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் இந்திய வர்த்தகச் சந்தையை எந்த விதத்திலும் கைவிடக் கூடாது என்பதற்காகச் சியோமி ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவு இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.
சீனா நிறுவனமான சியோமி-க்கு இந்தியா மிக முக்கியமான சந்தையாக மாறியுள்ளது, சியோமி தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்த சில வருடங்களிலேயே இந்தியாவின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமாக மாறியது. இதைத் தொடர்ந்து இந்திய நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் விலையில் சியோமி தயாரிப்புகள் உள்ளதால், இந்நிறுவனம் தொடர்ந்து வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.
இதுமட்டும் அல்லாமல் சியோமி இந்தியச் சந்தையில் இருக்கும் போட்டியைச் சமாளிக்கச் சக போட்டி நிறுவனங்களுக்கு இணையான தரத்தைத் தனது தயாரிப்புகளில் அளிக்க முயற்சி செய்து வருகிறது. இதனால் சில தயாரிப்புகளின் விலை உயர்ந்தாலும் மக்கள் இந்நிறுவனத்திற்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்தியாவில் சியோமி ஏற்கனவே பாக்ஸ்கான், பிளக்ஸ், டிக்சான் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்து ஸ்மார்ட்போன் மற்றும் இதர எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்து வரும் நிலையில் தற்போது புதிதாக 3 நிறுவனத்துடன் உற்பத்திக்காகக் கூட்டணி ஒப்பந்தம் செய்துள்ளது.
வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் புதிய உற்பத்தி கூட்டணிகள் அமைத்திருக்கும் காரணத்தால் ஒரு பக்கம் லாக்டவுன் விதிக்கப்பட்டாலும் மறுபக்கம் உற்பத்தி பணிகள் தொடரும், இதுமட்டும் அல்லாமல் விடுமுறை, பருவநிலை மாற்றம் போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளையும் இதன் மூலம் சமாளிக்க முடியும் எனச் சியோமி நம்புகிறது.
இதைத் தொடர்ந்து இந்தியாவில் மிளகாய் பஜ்ஜி கணக்காக விற்பனை செய்யப்பட்டு வரும் சியோமி ஸ்மார்ட் டிவி, இனி சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டாம் என முடிவு செய்துள்ள சீனா தெலுங்கானாவில் ரேடியன்ட் நிறுவனத்தின் கூட்டணியில் புதிய உற்பத்தி ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.
ஆந்திராவில் ஏற்கனவே சியோமி டிக்சான் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் கூட்டணியில் டிவி தயாரிப்பு பணிகளைச் செய்து வரும் நிலையில் தற்போது டிவி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள சியோமி ரேடியன்ட் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சியோமி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மனு குமார் ஜெயின் கூறுகையில், இந்தப் புதிய உற்பத்தி கூட்டணி மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் 99 சதவீதமும், ஸ்மார்ட் டிவிகளில் 100 சதவீதமும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது சியோமி பாக்ஸ்கான், பிளக்ஸ், டிக்சான் புதிதாகத் தற்போது DBG, BYD, ரேடியன்ட் ஆகிய நிறுவனத்தின் கூட்டணி மூலம் இந்தியாவில் செய்யப்படும் உபரி உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் சியோமி இந்தியா திட்டமிட்டுள்ளது.
சியோமி கடந்த வருடம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் டிவி-களைப் பங்களாதேஷ் மற்றும் நேப்பாள் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய உற்பத்தி கூட்டணி மூலம் இந்தியச் சந்தையின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட பின்பு ஏற்றுமதியைத் துவங்கத் திட்டமிட்டுள்ளது சியோமி.
சியோமி இந்தியாவில் உற்பத்தி, ரீடைல், கார்ப்பரேட், கிடங்கு பணிகளில் கடந்த வருடம் 50000 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகளைக் கொடுத்திருந்த நிலையில், தற்போது செய்யப்பட்டு உள்ள கூட்டணிகள் மூலம் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் எனக் கணிக்கப்படுகிறது.