மதுரை:
வாக்கு எண்ணும் மையத்துக்கு ஜெராக்ஸ் மிஷின் எடுத்துவந்ததால், திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஜெராக்ஸ் மிஷினை எடுத்து வந்தவர்களை திமுகவினர் தடுத்து நிறுத்தினர்.
நாளை மறுதினம் நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழகத்திலும் 39 நாடாளுமன்ற தொகுதி உள்பட 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை யின்போது தில்லுமுல்லு நடைபெற வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது கட்சி முகவர்கள் விழிப்புடன் இருக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தேர்தல் அதிகாரியின் அனுமதியின்றி ஜெராக்ஸ் மிஷின் கொண்டு செல்லப்பட்டது. இதை திமுகவினர் தடுத்து நிறுத்தி வாக்கு வாதம் செய்தனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், மதுரை ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான நடராஜன், வாக்கு எண்ணும் மையத்திற்கு ஜெராக்ஸ் மிஷின் உரிய அனுமதிபெற்றே திருப்பரங்குன்றம் கொண்டு செல்லப்பட்டது வாக்கு எண்ணும் மையத்திற்கு தேவையான இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கமானதே என்று தெரிவித்து உள்ளார்.