இன்று (ஜூலை 23):
இந்திய விடுதலைப் போராட்ட புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத் பிறந்த தினம்
1
 
த்தரப் பிரதேச மாநிலத்தின் பதர்க்கா என்ற ஊரில் 1906ம் ஆண்டு பிறந்த ஆசாத்தின்  இயற்பெயர் சந்திரசேகர சீதாராம் திவாரி.  இவரது தந்தை அலிஜார்பூரில் ஒரு எஸ்டேட்டில் பணியாற்றினார்.  சிறுவயதில், பருவத்தில் பழங்குடியின மக்களிடம் முறையாக வில் வித்தை கற்றார். பிறகு காசி வித்யா பீடத்தில் சமஸ்கிருதம் கற்றார்.
தனது 15 வயதில் காந்தியடிகளின் ஒத்துழை யாமை இயக்கத்தில் கலந்து கொண்ட ஆசாத், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இவரிடம் தந்தை பெயர், முகவரி என்று அடுத்தடுத்து கேள்விகள் கேட்கப்பட்டன.
அதற்கு அவர், “ என் தந்தை பெயர் ஆசாத் (விடுதலை), முகவரி சிறை” என்று பதில் நெஞ்சு நிமிர்த்தி பதில் அளித்தார்.  கோபம் கொண்ட நீதிபதி ‘இவனை சிறையில் அடையுங்கள்’ என்று உத்தரவிட்டார்.
உடனே ஆசாத், “நான் இவ்வாறு சொன்னால்தான், நீங்கள் என்னை சிறைக்கு அனுப்புவீர்கள் என்றுதான் கூறினேன்’ என்றார். நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர்.  இதனால் மேலும் ஆத்திரமடைந்த நீதிபதி, ‘இவனுக்கு 15 பிரம்படி கொடுங்கள்’ என்று உத்தரவிட்டார். ஒவ்வொரு அடி விழும்போதும் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என முழங்கினார் இந்த இளைஞர்.  இதன்  பிறகு  ‘சந்திரசேகர ஆசாத்’ என்று அழைக்கப்பட்டார்.
ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி கைவிட்ட பிறகும், ஆசாத் அதே நிலைப்பாட்டில் இருந்தார். முழுமையான சுதந்திரத்தை அடைய புரட்சிதான் வழி என முடிவுசெய்தார். இந்துஸ்தான் குடியரசு அமைப்பைத் தொடங்கிய ராம் பிரசாத் பிஸ்மில்லின் அமைப்பில் இணைந்தார். சோஷலிச கொள்கைகள் அடிப்படையில்தான் சுதந்திர இந்தியா உருவாக வேண்டும் என எண்ணினார்.
தனது அமைப்புக்குத் தேவைப்படும் நிதிக்காக  ஆங்கிலேய அரசுப் பொருட்களை இவரும் இவரது கூட்டாளிகளும் கொள்ளையடிக்கத் தொடங்கினர். இவற்றில் 1925-ல் நடைபெற்ற ககோரி ரயில் கொள்ளையும் அடங்கும்.

பகத் சிங், சுகதேவ், ராஜகுரு
பகத் சிங், சுகதேவ், ராஜகுரு

ஆங்கிலேய அரசு  இவருடைய “இந்துஸ்தான் குடியரசு” அமைப்பை  அழிக்க  தீவிரமாக செயல்பட்டது. இந்த காலகட்டத்தில் பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அனைவரும் இணைந்து, இந்த அமைப்பை ‘இந்துஸ்தான் சோஷ லிஸ குடியரசு அமைப்பு’ என்ற பெயருடன்  மீண்டும் செயல்பட்டனர்..
இதன் ராணுவப் பிரிவின் தலைவராக ஆசாத் செயல்பட்டார். பகத்சிங் உட்பட பல புரட்சியாளர்களுக்கு இவர் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். புரட்சியாளர்களுக்கு போர் பயிற்சிகளை அளித்தார்.
வைஸ்ராய் வந்த ரயிலை குண்டுவைத்து தகர்க்க, இந்த அமைப்பினர் முயற்சி செய்தனர், லாலா லஜ்பத்ராயின் மரணத்துக்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரியை துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து ஆசாத்தின் தலைக்கு ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டது. 1931-ல்  பணத்துக்கு ஆசைப்பட்ட ஒருவன் துப்பு கொடுத்ததால் இவர் இருந்த இடத்தை காவல்துறை சுற்றி வளைத்தது.
1
உடனிருந்த தோழரை, சாமர்த்தியமாகத் தப்பவைத்த  ஆசாத்,  போலீஸ் படையுடன் நீண்ட நேரம் போராடினார். காலில் குண்டடிப்பட்டதால் அங்கிருந்து அவரால் தப்பி ஓட முடியவில்லை. இவரது துப்பாக்கியில் ஒரே ஒரு தோட்டா மட்டுமே இருந்தது.  எந்த நிலையிலும் பிடிபடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தார். அப்போது ஆசாத்துக்கு வயது, 24.
இவர் வீரமரணம் அடைந்த  இடமான ஆல்ஃபிரெட் பூங்காவுக்கு, ஆசாத் பூங்கா என பெயர் சூட்டப்பட்டது.