டில்லி
அபிநந்தன் பாகிஸ்தானில் இருந்து திரும்பிய போது எடுக்கப்பட்ட அவருடைய புகைப்படத்தில் இருந்த பெண் குறித்து சமூக வலைதளங்களில் பல தவறான தகவல்கள் பதிவாகி உள்ளன.
புல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத இயக்க முகாம்களை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்தது. அதனால் கோபமடைந்த பாகிஸ்தான் விமானப்படை இந்திய எல்லைக்குள் புகுந்து குண்டு வீச்சு நடத்தியது. அந்த விமானங்களை விரட்டிச் சென்ற விமானம் சுடப்பட்டு அதை செலுத்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டார்.
உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் அரசு அபிநந்தனை விடுவித்தது. அவரை பாகிஸ்தான் அதிகாரிகள் வாகா எல்லைக்குள் கொண்டு வந்து விட்டனர். அப்போது அவரும் ஒரு பெண்ணும் உள்ள புகைப்படம் வெளியாகியது. அவர் யாரென தெரியாத நிலையில் அந்தப் பெண்ணை அபிநந்தனின் மனைவி என குறிப்பிட்டு ஒரு சிலர் சமூக வலை தளங்களில் பதிந்தனர். அதை நம்பி மேலும் பலரும் பதியவே அப்புகைப்படம் வைரலாகியது.
அந்த புகைப்படத்தில் இருப்பவர் அபிநந்தன் மனைவி அல்ல. அது மட்டுமின்றி அவர் இந்தியப் பெண்ணும் இல்லை. அவர் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத் துறை அலுவலக அதிகாரியான டாக்டர் பரேஹா பக்டி ஆவார். இவர் இந்திய விவகாரங்களை கவனித்து வருகிறார். ஆகவே சிறை பிடிக்கப்பட்ட அபிநந்தனை பத்திரமாக இந்திய எல்லைக்குள் அழைத்து வந்து விடும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே உள்ள பல பதற்றமான விவகாரங்களை பரேஹா பக்டி கவனித்து வருகிறார். இவர் வெளியுறவுத் துறையில் பணி புரியும் ஒரே பெண் அதிகாரி ஆவார். இவர் பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த ஆண்டு இந்தியாவை சேர்ந்த குல்பூஷன் யாதவை அவர் மனைவி மற்றும் தாய் பாக் சிறையில் சந்தித்த போது பரேஹா உடன் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.