டில்லி

சி பி எஸ் இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் தேர்வுக் கட்டணத்தைத் திருப்பி அளிக்கக் கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டது.  பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் கூட தடை விதிக்கப்பட்டது.  இதையொட்டி நாடெங்கும் முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டது.   இதனால் இந்த அண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை சி பி எஸ் இ ரத்து செய்தது.

டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞரும் சிபி எஸ் இ பள்ளியில் 10 ஆம் வகுப்பு  பயிலும் மாணவியின் தாயுமான தீபா ஜோசப் என்பவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார்.  அதில், “நான் எனது மகளுக்கு 10 ஆம் வகுப்புத் தேர்வு எழுதத் தேர்வுக் கட்டணமாக ரூ.2,100 செலுத்தி உள்ளேன்.

இதைப் போல் சி பி எஸ் இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கட்டணமாக மாணவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்துள்ளது.  கொரோனா தொற்று காரணமாக இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  ஆகவே தேர்வு மையங்களை அமைக்கவோ கண்காணிப்பாளர்களுக்கு ஊதியம் வழங்கவோ தேவையில்லை.

மேலும் தேர்வு முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.   எனவே எவ்வித செலவும் செய்யாத நிலையில் மாணவர்களிடம் இருந்து வசூலித்த தேர்வுக் கட்டணத்தை சி பி எஸ் இ வைத்திருப்பது முறையானது இல்லை.  ஆகவே இந்த கட்டணத்தொகையை மாணவர்களுக்கே திருப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.