மல்யுத்த பயிற்சிக்கு செல்லும் வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை அடுத்து டெல்லி ஜந்தர் மந்தரில் வினேஷ் போகத் தலைமையில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றார் முன்னாள் மல்யுத்த வீரரும் பாஜக-வைச் சேர்ந்தவருமான பபிதா போகத்.

மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் இதனை அமைச்சர் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளன துணை செயலாளர் வினோத் தோமர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தவிர குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து பிரிஜ் பூஷன் மீது குற்றச்சாட்டு சுமத்திய வீரர்களை விசாரணைக்கு அழைக்காமல் லக்னோ நகரில் விசாரணை குழு தனது விசாரணையை துவங்கியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷனை பதவியில் இருந்து நீக்காமல், தங்களையும் விசாரணைக்கு அழைக்காமல் வஞ்சிக்கப்பட்டதாக குமுறிவருகின்றனர்.

தங்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை அடுத்து ஞாயிறு அல்லது திங்கள் முதல் மீண்டும் போராட்டத்தை தொடங்க முடிவெடுத்துள்ளனர்.

மேலும் சில வீரர்கள் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் போக்கை கண்டித்து வேறு நாடுகளுக்கு சென்று விளையாட தேவையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.