மும்பை

மும்பை நகரத்தில் வெகு நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட முழு லோகல் ஏசி ரெயில் விரைவில் இயக்கப்பட உள்ளது.

இந்தியா முழுவதும் லோக்கல் ரெயில்களில் ஏசி கோச்சுகள் கிடையாது.  முதல் வகுப்பு, பெண்கள் பெட்டி ஆகியவைகள் மட்டுமே உள்ள இந்த நிலையில் மும்பையில்  முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்ட ரெயில் தேவை என பலரும் எதிர் பார்த்து வருகின்றனர்.   ஏற்கனவே மெட்ரோ ரெயில் முழுவதுமாக ஏசி வசதியுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  மேற்கு ரெயில்வே தற்போது முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ள ரெயில் விரையில் துவங்கும் என அறிவித்துள்ளது.   இது குறித்து மேற்கு ரெயில்வே பொது மேலாளர் குப்தா, ”விரைவில் மேற்கு ரெயில்வே மும்பையின் சர்ச் கேட் நிலையத்தில் இருந்து டஹானு ரோட் நிலையம் வரையில் முழுவதும் ஏசி வசதி கொண்ட லோகல் ரெயிலை இயக்க உள்ளது.  இந்த ரெயில் வரும் டிசம்பர் 25 முதல் இயங்கும் என ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்திருந்தார்.  ஆனால் இன்னும் ரெயில்வே வாரியத்திடம் இருந்து அனுமதி வரவில்லை.

ஆனால் மேற்கு ரெயில்வே தற்போது இந்த ரெயிலை இயக்க தயார் நிலையில் உள்ளது.   ஏற்கனவே பயணிகளுக்கு பல எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.   அதில் வாசல் அருகே நிற்கக் கூடாது என்னும் எச்சரிக்கையும் அடங்கும்.    இந்த ரெயில் அமைக்கப்படும் போது அதிக பட்ச வேகமாக மணிக்கு 100 கிமீ என இருக்கும்.   இன்னும் ஒரு வருடத்துக்குள் அனைத்து பெட்டிகளிலும் சிசிடிவி பொருத்தப் பட உள்ளது.  அது தவிர தீ எச்சரிக்கை  ஓசை, புகை வரும் போது கண்டுபிடித்து உடன் எச்சரிக்கை அனுப்பும் வசதி உள்ளது.  ஒவ்வொரு பெட்டியில் இரு தீயணைப்பு கருவிகள் உள்ளது” என தெரிவித்துள்ளார்.