பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக பிரிஸ்பேன் சென்றுள்ள இந்திய அணிக்கு, மிக மோசமான வசதி குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாய் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய அணியினர் தங்கியுள்ள ஹோட்டலில், ஹவுஸ் கீப்பிங், நீச்சல் குளம், ரூம் சர்வீஸ் உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதுமட்டுமின்றி, கழிவறையை சுத்தம் செய்தல், உணவு வழங்கல் உள்ளிட்டவைகளுக்கும் ஆட்கள் இல்லை.
ஏற்கனவே, தொடர் காயங்களால், இந்திய அணி கடுமையாக அவதிப்படும் நிலையில், இத்தகைய கொடுமைகளும் சேர்ந்துகொண்டு இந்திய அணியை வாட்டி வதைக்கின்றன. மேலும், இந்திய அணிக்கு மைதானத்தில் பயிற்சி செய்யும் வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
சிட்னி டெஸ்ட் முடிந்தவுடனேயே, பல்வேறு சூழல்களை மனதில் கொண்டு, பிரிஸ்பேன் செல்லவே தயங்கியது இந்திய அணி நிர்வாகம். ஆனால், ஆஸ்திரேலியா தரப்பில் சில உறுதிமொழிகள் வழங்கப்பட்ட பிறகே இந்திய அணி பிரிஸ்பேன் பயணப்பட்டது. ஆனால், அங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.