நாளை வைகாசி விசாகம் விரதம் – முருகனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கும்

 

வைகாசி மாதத்தில் விசாகம் நட்சத்திர நாளில் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும். வல்வினைகள் நீங்கும் வளமான வாழ்க்கை அமையும் வேலை வாய்ப்பு பெருகும். காரிய வெற்றி கிடைக்கும்.*

இந்த ஆண்டு வைகாசி விசாகம் வைகாசி 22ஆம் தேதி வியாழக்கிழமை ஜூன் 4ஆம் தேதியன்று வருகிறது

கொரோனா நோய்த் தொற்று பரவி வருவதால் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. முருகப் பெருமானை உள்ளத்தில் நினைத்து இல்லத்தில் இருந்து வழிபடுவதன் மூலம் பகை விலகும். உறவுகளிடையே பாசம் பெருகும். அன்றைய தினம் மோர், பானகம், தயிர்சாதம், இளநீர் தானம் செய்வதன் மூலம் குலம் தலைக்கும் என்பது ஐதீகம்.

வைகாசி விசாகம் புராணக் கதை

பராசர முனிவருக்கு ஆறு குழந்தைகள். ஆறு பேருமே சுட்டித்தனத்தில் கெட்டிக்காரர்கள். ஒருநாள் குளத்தில் குளிக்கும்போது நீரினை அசுத்தம் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்து வந்த மீன்கள், தவளைகள் வேதனைப்பட்டன. அதனைக் கண்ட பராசர முனிவர், நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும். நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள்” என்று கட்டளையிட்டார்.

அப்பா சொல்லை எந்த பிள்ளைதான் கேட்டிருக்கிறது. ஆறு பிள்ளைகளும் முனிவரின் சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டார்கள் இதனால் பல மீன்கள் இறந்தன. அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் மீன்களாக மாறக்கடவது என்று சாபமிட்டார். உடனே ஆறு பிள்ளைகளும் ஆறு மீன்களாக மாறினர். தவற்றுக்கு வருந்திய அவர்கள் சாப விமோசனம் கிடைக்காதா என்று கேட்டதற்குப் பார்வதி அருளால் விமோசனம் கிடைக்கும் என்றார்.

மீன்களாக மாறிய ஆறு பேறும் அந்த நீரில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர். ஒருசமயம் சிவலோகத்தில் பார்வதி தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது. அதனை அந்த மீன்கள் பருகியதால் ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள்.

ஆறு முனிவர்களும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக மீண்டும் வழிபட்டபோது நீங்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்யுங்கள், அங்கு முருகக் கடவுள் அருள்புரிவார் என்று அசரீரி ஒலித்தது. அதன்படி அனைவரும் திருச்செந்தூர் சென்று தவம் மேற்கொண்டனர். வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்துடன் கூடிய நிறைந்த பௌர்ணமி நாளில் முருகப்பெருமான் அருள் கிடைத்தது.

சிவனின் அருளால் ஆறு முனிவர்கள் சாபம் நீங்க, முருகப்பெருமான் அருள்புரிந்த நாள் வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் முன் வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப் பெருமானை வழிபட, துன்பம் நீங்கி இன்பம் பெறுவர் என்று புராணங்கள் கூறுகின்றன.