பார்சிலோனா: கொரோனா வைரஸ் தாக்குதல் பீதியால் உலகின் தலை சிறந்த மொபைல் வர்த்தக கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இன்னும் அந்த நாட்டில் பாதிக்கப்பட்ட மற்றும் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலகின் பல நாடுகளில் சீனர்கள், சீன உணவு வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் உலகின் தலை சிறந்த மொபைல் வர்த்தக கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
1,100 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற வைரஸ் காரணமாக இந்த மொபைல் கண்காட்சி உலகளவில் ரத்து செய்யப்பட்ட மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.
பிப்ரவரி 24-27 வரை பார்சிலோனாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் மொபைல் வர்த்தக சங்கமான ஜி.எஸ்.எம்.ஏ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ், பயணத்தின் போது பரவும் அபாயம், பிற சூழ்நிலைகள் குறித்த உலகளாவிய அக்கறை காரணமாக இந்த நிகழ்வை இப்போது நடத்துவது சாத்தியமில்லை என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்று 2 பேருக்கு மட்டுமே இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற கண்காட்சியில் பொதுவாக சீனாவிலிருந்து 5,000 முதல் 6,000 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வர்.
ஆனால் இம்முறை அந்த எண்ணிக்கையை எட்ட முடியாது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கணக்கிட்டு இருக்கின்றனர். அதே நேரத்தில் இந்த ரத்து அறிவிப்பு வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வோடபோன், நோக்கியா, டாய்ச் டெலிகாம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் கண்காட்சியில் கலந்து கொள்வதில் இருந்து வெளியேறின என்பது குறிப்பிடத்தக்கது.