மொபைல் போன் மூலம் செயல்படும் வகையில், இந்தியாவில் வென்டிலேட்டர் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது உலகிலேயே சிறிய வென்டிலேட்டர் என கூறப்படுகிறது.

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிகிச்சை அளிக்கும் வகையில்,  மருத்துவமனைகளுக்கு தேவையான வென்டிலேட்டர்கள் எனப்படும் செயற்கை சுவாச கருவிகளை ஆயிரக்கணக் கான எண்ணிக்கையில் அரசுகள் வாங்கி வருகின்றன. இதனால் அதற்கு கடும் தட்டுப்பாடுகள் நிலவி வருகிறது.

கொரோனா நோய்ய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை இந்த செயற்கை சுவாச கருவிகளே வழங்குகின்றன.

வென்டிலேட்டர் என்றால் என்ன?

நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளியின் ஒட்டுமொத்த சுவாச செயல்பாட்டை மேற்கொள்ளும் இயந்திரம்தான் இந்த வென்டிலேட்டர்கள்.  சிக்கலான சுவாசப் பிரச்சினையின்போது,  நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப  ஆக்சிஜன் மிக்க காற்றை நுரையீரலுக்குள் செலுத்த உதவும் இயந்திரம்தான் வென்டிலேட்டர்.

வென்டிலேட்டர்களில் ஈரப்பதமூட்டியும் இருப்பதால், அவை செயற்கையாக செலுத்தப்படும் காற்றிலுள்ள வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை நோயாளியின் உடல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து சரிவர பராமரிக்கிறது.

நோயாளியின் மொத்த சுவாச செயல்பாட்டையும் வென்டிலேட்டர் மேற்கொள்வதால் இடைப்பட்ட நேரத்தில் நோயாளியின் சுவாச தசைகள் ஓய்வெடுக்க வாய்ப்பு கிடைக்கிறது.

இது நோயாளிக்கு தொற்றுநோயை எதிர்த்துப் போராடி அதிலிருந்து மீண்டு வருவதற்கு அவகாசம் தருகிறது.

இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஆறில் ஒருவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, சுவாச பிரச்சனை ஏற்படுகிறது.

தற்போது, உலகம் முழுவரும் லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களின் சுவாசத்திற்கு பேருதவியாக இருப்பது வென்டிலேட்டர்தான்.

ஆனால், இவை போதுமான அளவு இல்லாத நிலையில், அதை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் செயல்பாடு நாளடைவில் பலவீனமடைகிறது. இந்த பிரச்சனை குறித்து அறிந்தவுடன், நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலம் ரத்த குழாய்களை விரிவடைய செய்வதால், அதிகளவிலான நோயெதிர்ப்பு செல்கள் நுழைகின்றன.

இவர்களுக்கு முதல்கட்டமாக  ஒரு வால்வு வழியாக அழுத்தப்பட்ட ஆக்ஸிஜன் செலுத்தப்படும் ஹுட்ஸ் ரக கருவிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை மூச்சு காற்றிலுள்ள திரவ துளிகளின் மூலமாக வைரஸ் காற்றின் வழியே பரவும் அபாயத்தை குறைக்கின்றன.

எனினும், தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நோயாளி களுக்கு உடனடியாக வென்டிலேட்டர்கள் பொருத்தப்படும். இதன் மூலம், நோயாளியின் உடலில் ஆக்சிஜன் அளவு நிலைப்படுத்தப்படும்.

இந்தியாவை பொறுத்தவரை தற்போது ஐம்பதாயிரத்துக்கும் குறைவான வென்டிலேட்டர்களே மருத்துவமனைகளில் உள்ளதாகவும், அடுத்த சில வாரங்களில் இதன் தேவை பல லட்சங்களை தாண்ட கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கண்டுபிடிப்பு

இந்நிலையில், இந்தியாவில் ஏற்கனவே வென்டிலேட்டர்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை அதிகளவி லான கருவிகளை உற்பத்தி செய்யுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோன்று, மகேந்திரா  உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் குறைந்த விலை வென்டிலேட்டர்களை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளன.

பெரு நிறுவனங்களுக்கு போட்டியாக தற்போது மிகச்சிறிய அளவிலான வென்டிலேட்டரை A-SET Robotics என்ற் நிறுவனம் புதிய வகை வென்டிலேட்டர்களை தயாரித்து உள்ளது.  இவர்களின் பின்புலத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர்.

மொபைல் போன் மூலம் எளிதாக இயக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வென்டிலேட்டரை எளிதாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம், இதற்கு ஆக்சிஜன் டேங்க் தேவையில்லை. (நார்மலான வென்டிலேட்டருக்கு ஆக்சிஜன் டேங்க் தேவை) 

இதுமட்டுமின்றி, இந்த வென்டிலேட்டர் மற்ற வென்டிலேட்டரை விட 450 மடங்கு சிறியது, மேலும் விலையும் 100 மடங்கு குறைவானது என்று அதை தயாரித்துள்ள நிறுவனம் தெரிவித்து உள்ளது. மொபைல் போன் App வழியாக செயல்பட முடியும்.

இந்த வெடின்டிலேட்டர்களை கிராமப்புற நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் எளிதாக உபயோகப் படுத்தலாம், மேலும், பாராலைசிஸ் நோயாளிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். பெருமருத்துவமனைகளும் அவசரத் தேவைகளுக்கு இதை பயன்படுத்தலாம்..

இந்த புதிய தொழில்நுட்பம் நிரூபிக்கப்பட்டால்,  இதுதான் உலகின் மிகச்சிறிய வென்டிலேட்டராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.