டெல்லி: 2020ம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா 84வது இடத்தில் இருக்கிறது. 58 நாடுகளில் இந்தியர்களுக்கு முன் விசா தேவையில்லை.

சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகமானது ஆய்வின் அடிப்படையில் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பாஸ்போர்ட் எவை என்ற பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி, 2020ல் 84வது இடத்தில் உள்ள இந்திய பாஸ்போர்ட், உலகளவில் 58 இடங்களுக்கு விசா இல்லாத நுழைவை பெற முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 191 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலைப் பெறுவதால் உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டின் பட்டியலில் ஜப்பான் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

2வதுஇடத்தில் சிங்கப்பூர் உள்ளது. ​​இந்தியாவின் தரவரிசை 2019ல் 82வது இடத்தில் இருந்தது. தற்போது, 2020ம் ஆண்டில் 84வது இடத்திற்கு குறைந்துள்ளது.

உலகின் முதல் 10 மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்:

ஜப்பான்: 191 (நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவு)

சிங்கப்பூர்: 190

ஜெர்மனி, தென் கொரியா: 189

பின்லாந்து, இத்தாலி: 188

டென்மார்க், லக்சம்பர்க், ஸ்பெயின்: 187

பிரான்ஸ், சுவீடன்: 186

ஆஸ்திரியா, அயர்லாந்து, நெதர்லாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து: 185

பெல்ஜியம், கிரீஸ், நோர்வே, இங்கிலாந்து, அமெரிக்கா: 184

ஆஸ்திரேலியா, கனடா, செக் குடியரசு, மால்டா, நியூசிலாந்து: 183

ஹங்கேரி, லிதுவேனியா, ஸ்லோவாக்கியா: 181

இந்தியாவின் பாஸ்போர்ட் தரவரிசை 2020 ஆம் ஆண்டில் 2 இடங்களைக் குறைத்து 84 வது இடத்திற்கு சென்றது. சீனாவின் பாஸ்போர்ட் 71 வது இடத்தில் இருப்பதால் இந்தியாவை விட சக்தி வாய்ந்தது ஆகும். ஆப்கானிஸ்தானின் பாஸ்போர்ட் உலகின் மிக மோசமான பாஸ்போர்ட் என்றும், பாகிஸ்தானின் 4வது மோசமான பாஸ்போர்ட் என்றும் அந்த தரவுகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பூடான், கம்போடியா, இந்தோனேசியா, மக்காவோ, மாலத்தீவுகள், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, கென்யா, மொரீஷியஸ், சீஷெல்ஸ், ஜிம்பாப்வே, உகாண்டா, ஈரான் மற்றும் கத்தார் போன்ற 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.