ஜெனிவா: கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்த உலகம் கடும் உணவுப் பஞ்சத்தை சந்திக்கும் பேரபாய நிலையில் உள்ளதாக ஐ.நா. அவை எச்சரித்துள்ளது.
எனவே, இதுதொடர்பாக ஏற்படவுள்ள பேரிடரில் இருந்து ஏழை மக்களைப் பாதுகாப்பதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. சார்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது; இந்த விஷயத்தில் உலக நாடுகள் அலட்சியம் காட்டினால், சாதாரண மக்கள், தங்களுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்தைப் பெறுவதுகூட சாத்தியமில்லாமல் போய்விடும். எனவே, இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உடனடி நடவடிக்கைகள் இந்த விஷயத்தில் மேற்கொள்ளப்படவில்லை என்றால், உலகளாவிய ‘உணவு நெருக்கடி நிலை’ ஏற்படும். இந்த நெருக்கடி நிலையால் பலகோடி மக்களின் வாழ்க்கையில் பல மோசமான நீண்டகால விளைவுகள் ஏற்படும். குறிப்பாக, குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, உலக நாடுகள் இந்த விஷயத்தில் கடினமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இன்றைய கொரோனா காலகட்டத்தில், அதிகளவு உணவுதானிய உற்பத்தி இருக்கும் நாடுகளில்கூட, உணவு வழங்கல் சங்கிலியில் இடைஞ்சல் ஏற்படுவதை நாம் காண்கிறோம்.
இந்த ஆண்டில் மட்டும் 50 மில்லியன் மக்கள் கடும் வறுமையில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு இளமையில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு, அவர்களின் வாழ்க்கை முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.