டில்லி

லகில் உள்ள பல தலைவர்கள் ஒடிசா ரயில் விபத்துக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்

 

நேற்று ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் 3 ரயில்கள் மோதிய விபத்தில் இதுவரை சுமார் 580 பேர் உயிரிழந்துள்ளனர்.    நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மரணம் அடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்து உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் பிரதமர் தமது டிவிட்டரில்,

”இந்தியாவில் நடந்த ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன் . ”

எனத் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புடின்,

”இந்திய மாநிலம் ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து வேதனையளிக்கிறது.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்”.

என்று இரங்கல் தெரிவித்து உள்ளார்.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா,

“ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலி மற்றும் காயம் அடைந்த செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். ஜப்பான் அரசு மற்றும் மக்கள் சார்பாக, உயிர் இழந்தவர்களுக்கும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.”

எனத் தெரிவித்துள்ளார்.