வாஷிங்டன்: கொரோனா தொற்று அச்சுறுத்தலே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது புதிய வகை நோயாக குரங்கு அம்மை தொற்று பரவி வருகிறது. இந்த தொற்றை தடுக்க இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில்,  12 நாடுகளில் 92 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.

குரங்கம்மை தொற்று மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாகக் காணப்படும் வைரஸ் மூலம் பரவும் நோய். இது சின்னம்மையைப் போன்ற அரிய தொற்றுநோய். ஆனால் சின்னம்மையைவிட அதன் தாக்கம் சற்று குறைவு. காய்ச்சல், தலைவலி, முகத்திலிருந்து தொடங்கி உடலுக்குப் பரவும் கொப்புளங்கள் போன்றவை இந்த தொற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள். குரங்கம்மையை ஏற்படுத்தும் வைரஸ் தோலின் மேற்புறத்தில் உள்ள உடைந்த உயிரிகள் மூலமாகவும், சுவாசக் குழாய் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது.

உலகையே கொரோனா தாக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வந்த நிலையில் தற்போது கனடா, பிரிட்டன், பெல்ஜியம், ஆஸி., ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு உ லக நாடுகளை அறிவுறுத்தி உள்ளது.

இந்த குரங்கு அம்மை நோயால், இங்கிலாந்தில் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மட்டுமின்றி ஸ்பெயின், போர்ச்சுகல், ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி, சுவீடன் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவிலும் பரவி உள்ளது. பொதுவாக ஆப்ரிக்க நாடுகளில் மட்டுமே காணப்படும் குரங்கு அம்மை, தற்போது உலகம் முழுவதும் பரவக் காரணம், அது உருவமாறி புதிய வகை வைரஸ் தோன்றி இருக்கலாம் என நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்த வைரசுக்கு என தனியாக தடுப்பூசி எதுவும் இல்லை. பெரியம்மைக்கான தடுப்பூசியே குரங்கு அம்மைக்கு எதிராக 85 சதவீதம் பாதுகாப்பு தருவதாக ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். ஆனால், இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தென் கொரியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அங்கு ஓசன் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், ‘குரங்கு அம்மை வேகமாக பரவக்கூடியது என்பதால் அது கவலை தரும் ஒன்றாக உள்ளது. இதனால், அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த வைரசுக்கு எதிரான வலுவான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடக்கின்றன,’ என்றார்.

இந்த நிலையில்,  உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குரங்கு அம்மை நோய் தொற்று இதுவரை 12 நாடுகளில் 92 பேருக்கு தொற்றி உள்ளது. மேலும், சில நாடுகளில் 50 பேருக்கு பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இன்னும் பலருக்கு தொற்ற வாய்ப்புள்ளது. எனவே, பாதிப்பு ஏற்பட்ட நாடுகளுடன் இணைந்து பிற நாடுகளும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்,’ என தெரிவித்து உள்ளது.