உடல் எடையை குறைக்க விரும்புவோருக்காக புதிதாக காந்த சக்தியில் இயங்கக்கூடிய வாய்ப்பூட்டு சாதனம் ஒன்றை நியூஸிலாந்தில் உள்ள ஒடாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேல் மற்றும் கீழ் தாடையை காந்த சக்தியால் இணைத்துப் பிடித்துக்கொள்ளும் இந்த சாதனம், ஒரு அளவுக்கு மேல் வாயை திறக்க முடியாமல் இறுக்கமாக பிடித்துக்கொள்கிறது.

2 மில்லி மீட்டர் அளவுக்கு மேல் வாயைத் திறக்க முடியாது என்பதால் நீர் ஆகாரம் தவிர, கடித்து சாப்பிடக்கூடிய எந்த ஒரு உணவு பொருளையும் சாப்பிட முடியாது.

திரவ உணவு தவிர வேறு எதையும் விழுங்க முடியாது என்பதால், இரண்டு வாரங்களில் உடல் எடை 6.36 கிலோ அளவுக்கு குறைந்துவிடுவதாக இந்த சாதனத்தை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த புதிய வாய்ப்பூட்டு சாதனம் குறித்த செய்தி வெளியானதும், இது உடல் எடை குறைப்பதற்கான சாதனம் அல்ல, இது துன்புறுத்தும் சாதனம் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தனர்.

விமர்சனங்களை கண்ட ஆராய்ச்சியாளர்கள், இது முக்கியமாக அதிக உடல் எடை காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் மருத்துவமனையில் இருப்பவர்களுக்கும், உடல் எடை குறைந்தால் தான் அறுவை சிகிச்சை செய்யமுடியும் என்ற நிலையில் உள்ளவர்களுக்குமானது.

இதை பொருத்துவதன் மூலம், கட்டுப்படுத்த முடியாத உணவு பழக்கம் இருக்கக்கூடியவர்களின் உணவு பழக்கம் மாறுவதுடன் அவர்களின் உடல் எடையும் குறைகிறது, மேலும், இதை பொருத்துவதன் மூலம், பேசுவதற்கோ சுவாசிப்பதற்கோ எந்தவித தடையும் இருக்காது என்றும் விளக்கமளித்துள்ளனர்.

பல் மருத்துவரைக் கொண்டு பொருத்தப்படும் இந்த சாதனத்தை பயனாளர் தான் விரும்பிய நேரத்தில் அல்லது அவசர காலத்தில் அகற்றிவிடலாம். கழட்டி மீண்டும் அணியக்கூடிய வகையில் இந்த புதிய வாய்ப்பூட்டு சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.