ண்டிகர்

ஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் அனைத்து குடும்பத்துக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டில்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.  அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லி முதல்வராகப் பதவி வகித்து வருகிறார்.   டில்லிக்கு அண்டை மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.  அங்கு அமரீந்தர் சிங் முதல்வராகப் பதவி வகித்து வருகிறார்.  ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க உத்தேசித்துள்ளது.

இதையொட்டி அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதிகள் குறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சண்டிகர் பிரஸ் கிளப்பில் பேசி உள்ளார்.  அரவிந்த் கெஜ்ரிவால், “ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி பெற்றால், மின்சார பில் தள்ளுபடி வாக்குறுதி உடனடியாக நிறைவேற்றப்படும்.  இலவசமாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.

இவ்வாறு செய்வதன் மூலம், பஞ்சாபில் சுமார் 77 சதவீதம் முதல் 80 சதவீதம் பேர் பூஜ்ஜிய மின்சார பில் பெறுவார்கள். இதனால் அவர்கள் பழையபடி மின்சார பில் கட்டத்தேவையில்லை. வருமானத்தில் பாதியளவு மின்சார கட்டணத்திற்கே செலவாகிறது என சில பெண்கள் கூறுகின்றனர். இதை எப்படி சமாளிக்க முடியும்?

ஒரு மின்விசிறி, இரண்டு விளக்கு மட்டுமே வைத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ.50,000 மின் கட்டணம் வருகிறது. இவை எப்படிச் சாத்தியமாகும்?  இதெல்லாம் முற்றிலும் தவறு ஆகும்.  ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தவுடன் இந்த தவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

அதுமட்டுமல்ல பழைய மின் கட்டண பாக்கியை யாருமே கட்டத் தேவையிருக்காது. இந்தியாவிலேயே மின்சார செலவு டெல்லியில்தான் மிகக்குறைவு. டில்லியில் அதைச் செய்யும் போது பஞ்சாபிலும் ஏன் இதைச் செய்ய முடியாது?” என வினா எழுப்பி உள்ளார்.