துபாய்: இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த 2021ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், 2021ம் ஆண்டிற்கான உலகக்கோப்பை டி-20 தொடர், அமீரகத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
டி-20 உலகக்கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கவுள்ளன. இந்தாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், அப்போட்டித் தொடரை, இந்தியாவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்தியாவில், அதற்காக மொத்தம் 9 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன.
அந்த மைதானங்களை ஆய்வுசெய்ய, ஐசிசி தரப்பிலிருந்து ஒரு நிபுணர் குழு இந்தியாவிற்கு வந்து, ஏப்ரல் 26ம் தேதி முதல் தனது பணிகளை துவக்குவதாக இருந்தது. ஆனால், இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா தீவிரநிலையால், அப்பயணம் ரத்துசெய்யப்பட்டது.
ஐபிஎல் தொடரை வேறு திட்டமிடல்களில் நடத்தி, அதன்மூலம், டி-20 உலகக்கோப்பை தொடருக்கான தயாரிப்பை மேற்கொள்ள முனைந்தது பிசிசிஐ. அதாவது, இப்புதிய திட்டத்தின்படி, ஒரேநேரத்தில் இரண்டு மைதானங்கள் செயல்பாட்டில் இருக்கும்.
ஆனால், கொரோனா காரணத்தால், உலகின் பல நாடுகள், இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்தன. இதனால், ஐபிஎல் தொடரில் கலந்துகொண்டுள்ள வீரர்களுக்கு சிக்கலானது. இத்தகைய பல்வேறு காரணங்களால், இந்தியாவில் நடைபெற்று வந்த நடப்பு ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதன்மூலம், டி-20 உலகக்கோப்பை தொடர், அமீரக நாட்டில் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.