சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 59,480 கி.மீ. நீள சாலையில் சுமார் 93.2 கி.மீ. சாலைகள் 100 முதல் 256 மி.மீ. மழையை தாங்கக்கூடியதாக இல்லை என்று உலக வங்கி நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை வியாழனன்று உலக வங்கி வெளியிட்டுள்ளது.

10 முதல் 25.6 செ.மீ. வரை மழை பெய்யும் நேரங்களில் சென்னையின் முக்கிய இடங்களான ஆழ்வார்பேட்டை, பீமன்னா கார்டன், வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய ஐந்து இடங்களில் உள்ள மருத்துவமனைகளை அணுக முடியாத நிலை உள்ளது.

தி.நகர், மந்தைவெளி, அம்பத்தூர் எஸ்டேட், வியாசர்பாடி ஆகிய இடங்களில் உள்ள பேருந்து நிலையங்கள் திருவான்மியூர் உள்ளிட்ட மற்ற பேருந்து நிலையங்களை ஒப்பிடுகையில் அணுகமுடியாத அளவுக்கு மிகவும் மோசமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

15, 15ஜி, எஸ்18, எஸ்15, 147எக்ஸ், 27பி, எஸ்86 ஆகிய பேருந்து வழித்தடங்கள் மற்ற வழித்தடங்களைக் காட்டிலும் தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகள் வழியாக செல்வதாக தெரிவித்துள்ளது.

அதேபோல், சேத்துபட்டு, கோடம்பாக்கம்,லைட்ஹவுஸ் பறக்கும் ரயில் நிலையம் ஆகிய மூன்று ரயில் நிலையங்களும் மழைக்காலங்களில் அணுக முடியாத வகையில் உள்ளது.

தவிர கனமழைக் நேரங்களில் பயன்படுத்த மிகவும் மோசமான மேம்பாலங்கள், சுரங்கப்பாலங்கள் மற்றும் அணுக முடியாத தீயணைப்பு நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு புள்ளிவிவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.

சென்னை மாநகர ஒருங்கிணைந்த போக்குவரத்துக்கு (Chennai Unified Metropolitan Transport Authority – CUMTA) உதவும் வகையில் உலக வங்கி மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.