சென்னை: பள்ளி, கல்லூரி ஹாஸ்டல்களுக்கு சென்னை மாநகராட்சி விதித்த வணிக கட்டிட வரியை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அவர்களிடம் குடியிருப்பு சொத்து வரி வசூலிக்க உத்தரவிட்டது.
வேலை செய்யும் ஆண்கள்/பெண்கள் விடுதிகள், மாணவ மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிகள் போன்றவை குடியிருப்பு சொத்துக்கள், வணிக விகிதத்தில் வரி விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகள், விடுதிகள் வணிகக் கட்டிடங்களுக்கான சொத்து வரி செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தன. இந்த உத்தரவுகளை எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தன. விசாரணையின்போது, விடுதி உரிமையாளர்கள் சார்பில் வாதிடும்போது, விடுதிகளுக்கு வணிகக் கட்டிடங்களுக்கான சொத்து வரி விதித்தால், அந்தத் தொகையை விடுதியில் தங்கியுள்ளவர்களிடம்தான் வசூலிக்க நேரிடும் என்று எடுத்துரைக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தனது தீர்ப்பில், “தனியாக வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கும் நிலையில் இல்லாதவர்கள் தான் இதுபோன்ற விடுதிகளில் தங்குகிறார்கள். மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்வோருக்கான ஹாஸ்டல்களை வணிக கட்டிடங்களாக கருத முடியாது, எனவே, விடுதிகள் குடியிருப்பு கட்டிடங்களே தவிர, வணிகக் கட்டிடங்களாகக் கருத முடியாது.” என்று கூறினார்.
மேலும், விடுதிகள் வணிகக் கட்டிடங்களுக்கான சொத்து வரி செலுத்த வேண்டும் என்ற மாநகராட்சியின் உத்தரவை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், விடுதிகளிடம் குடியிருப்பு கட்டிடங்களுக்கான வரியை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.