கிருஷ்ணகிரி கிருஷ்ணராஜசாகர் அணையில் பழுதான 7 மதகுகளை வெட்டி அகற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
கிருஷ்ணகிரியில் கே.ஆர்.பி.அணை உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் அணையின் முதல் மதகு உடைந்தது. இதையடுத்து 2018-ம் ஆண்டில் ரூ.3 கோடி மதிப்பில் உடைந்த மதகிற்கு பதிலாக ஒரு புதிய மதகு பொருத்தப்பட்டது. இதே போல அணையின் மற்ற 7 மதகுகளும் பழுதடைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து 52 அடி கொள்ளளவு கொண்ட அணையில் 42 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அணையின் மற்ற 7 மதகுகளை மாற்ற கடந்த ஆண்டு நவம்பரில் டெண்டர் நடந்தது. இதில் திருச்சியை சேர்ந்த தனியார் நிறுவனம் ரூ.19.7 கோடி மதிப்பில் பணிகளை தொடங்குகிறது. இதையடுத்து திருச்சியில் உள்ள தொழிற்சாலையில் புதிய மதகுகள் தயாரிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு மதகையும் 6 பாகங்களாக தயாரித்து அணைக்கு கொண்டு வந்து பின்னர் அவற்றை பொருத்த உள்ளனர். இதற்காக அணையின் நீர் மட்டம் 31.60 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் 158 கன அடி நீர் கால்வாயில் திறந்து விடப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே இருக்கும் பழைய 7 மதகுகளையும் வெட்டி எடுக்க கூடிய பணிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. இப்பணி தற்போது தீவிரம் அடைந்துள்ளது.