சென்னை: சென்னை கடற்கரை-வேளச்சேரி-பரங்கிமலை மின்சார ரயில் பாதை இணைப்புப் பணிகள் நிறைவடைந்து, 5 கி.மீ. தூரத்திற்கு சரக்கு ரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளது.  இந்த சோதன ஒட்டம் வெற்றிபெற்றதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 சுமார் 17 ஆண்டுகள் நீடித்து வந்த இந்த பணிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. இதனால் இந்த வழித்தடத்தில் விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை கடற்கரை – வேளச்சேரி உயர்மட்டப் பாதையில் (MRTS)  தற்போது தினசரி 100 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் சேவைகளின் மூலம் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த ரயில் பாதையை வேளச்சேரியுடன் பரங்கிமலையை இணைக்கும் வகையில் ஒரு முக்கிய மேம்பால ரயில் பாதை அமைக்கும் திட்டம், கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் நிலம் கையப்படுத்துவதில் ஏற்பட்ட சட்ட சிக்கல் காரணமாக, பணிகள் தொய்வடைந்த நிலையில்,  கடந்த  2022-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டு.  இணைப்புப் பணிகள் தற்போது முழுவதுமாக நிறைவடைந்துள்ளன.

பணிகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து, வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரையிலான 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில்வே அதிகாரிகள் சோதனைகளைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் 7-ம் தேதி, 10 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் ஒன்று இந்தப் புதிய பாதையில் இயக்கப்பட்டு முதற்கட்ட சோதனை நடத்தப்பட்டது.  அதையடுத்து,  சரக்கு ரயில் பெட்டிகளை இணைத்து மீண்டும் ஒரு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, புதிதாக அமைக்கப்பட்ட தண்டவாளங்களின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனை ஒட்டம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், அடுத்தகட்டமாக இந்தப் பாதையில் மின்சார ரயில் ஒன்று இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கமிஷனர் முன்னிலையில் அதிவேக ரயில் இயக்கி இறுதிச் சோதனை நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர். இந்த சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த பிறகு, வேளச்சேரி-பரங்கிமலை வழித்தடத்தில் பயணிகள் சேவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]