நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் குமரேசன் அவர்களது முகநூல் பதிவு:
அவரைப் பற்றி எழுதியிருக்கிறேன். அவருக்கு எழுதியதில்லை. என் காதலுக்குரிய அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் தமது 76வது வயதில் இன்று காலமானார். அறிவியல் வரலாற்றில் தானே ஒரு காலமானார்.
மூளையும் இதயமும் நுரையீரலும் கை விரல்களும் தவிர்த்துப் பிற உறுப்புகள் செயலிழந்து எப்போதும் கணினியோடு இணைக்கப்பட்ட எந்திரக் குரலுடன் சக்கர நாற்காலியிலேயே சுற்றிவந்தவர், விவாதங்கள் தன்னைச் சுற்றி வரவைத்தவர். பேரண்டம் பற்றிய உண்மைகளைப் பேசுவோருக்கு நம்பிக்கையளித்தவர். சாதனைகளுக்கு உடற்குறைபாடுகள் தடையல்ல என்று தன்னம்பிக்கை தந்தவர்.
‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற தனது புத்தகத்தில் “கடவுளின் மனசை அறிவதே எனது நோக்கம்” என்று கூறி பலரது புருவங்களை உயர்த்தவைத்தவர்.
‘மாபெரும் வடிவமைப்பு’ என்ற அடுத்த புத்தகத்தில், “பேரண்டத்தின் வரலாற்றைப் பார்த்தால் இதைப் படைக்கக் கடவுள் தேவையில்லை என்பது தெளிவாகிறது,” என்று அறிவித்து உண்மையை உணர்த்தியவர்.
அவரது சிந்தனைகளில் நான் மேற்கோள் காட்ட விரும்புகிற ஒன்று இது: “அறிவுடைமை என்பது மாற்றத்திற்கு உட்படுத்திக்கொள்ளும் திறன்.”
இன்னொன்று: “எல்லாமே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவைதான், அதை நம்மால் மாற்ற முடியாது என்று சொல்லிக்கொள்கிறவர்கள் கூட, சாலையைக் கடப்பதற்கு முன் பார்த்துக்கொள்கிறார்கள் என்பதை நான் கவனித்திருக்கிறேன்.”