சிங்கப்பூர்
போதைப் பொருள் கடத்திய வழக்கில் சிங்கப்பூரில் கைதான பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் என்பது சிங்கப்பூரில் மிகப்பெரிய குற்றமாகும். சிங்கப்பூரில் கஞ்சா 500 கிராம், ஹெராயின் 15 கிராமுக்கு மேல் கடத்தினால் தூக்குத்தண்டனை வரை விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது. எனவே சிறிய அளவில் போதைப்பொருள் கடத்தினாலே தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என ஐ.நா. சபை, சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
சிங்கப்பூரில் வசிக்கும் சரிதேவி டிஜமானி (வயது 45) என்ற பெண் 31 கிராம் ஹெராயின் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டதால் கடந்த 2018-ம் ஆண்டு அவருக்குத் தூக்குத்தண்டனை விதித்து அந்த நாட்டின் நீதிமன்றம்உத்தரவிட்டது.
அவர் மேல்முறையீடு, அதிபரிடம் மன்னிப்பு கடிதம் போன்ற நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இந்த பெண்ணின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனச் சிங்கப்பூர் அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தன.
அண்டை நாடான தாய்லாந்து கஞ்சா பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கி உள்ளது. மலேசியாவில் கடுமையான குற்றங்களுக்கு விதிக்கப்படும் கட்டாய மரண தண்டனை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க இந்த தூக்குத்தண்டனை மிக அவசியம் எனச் சிங்கப்பூர் அரசாங்கம் கூறி வருகிறது.
நேற்று சரிதேவி டிஜமானிக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் போதைப்பொருள் கடத்தியதற்காக நேற்று தூக்கிலிடப்பட்டு உள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு மே வொன் என்ற பெண் போதைப்பொருள் வழக்கில் தூக்கிலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.