ஒசாகா:

ரடங்கின் போது கடைக்கு போய் பொருட்களை வாங்க பொருத்தமானவர்கள் யார் ? ஆண்களா ?பெண்களா ? கொரோனா வைரஸ் காரணமாக சிறப்பு பட்டிமன்றம்.

ஜப்பான் நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான ஒசாகா நகர மேயர் இச்சிரோ மாட்சுய் கடைகளில் கூட்டம் சேர்வதற்கு காரணம் பெண்கள் தான், ஒரு பொருளை வாங்க அதன் தயாரிப்பாளர் மற்றும் தரம் என்று ஒவ்வொன்றையும் பொறுமையாக பார்த்து வாங்குவதால் நீண்ட நேரம் ஆகிறது அதனால் கடையில் கூட்டம் சேர்கிறது.

அதனால், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஆண்களே கடைக்கு செல்ல உகந்தவர்கள் என்று நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதை வைத்து இப்போது ஜப்பானில் பட்டிமன்றமே நடந்து வருகிறது.

பிரபல ஜப்பானிய பத்திரிகையாளர் ஷோகோ எகாவா மேயரின் இந்த கருத்துக்கு “அன்றாட வாழ்க்கையைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது” என்று ‘ட்வீட்’ செய்திருக்கிறார்.

எகாவாவின் இந்த ‘ட்வீட்’ 3,000 க்கும் மேற்பட்ட ‘ரீ-ட்வீட்’களைப் பெற்றது, மாட்சுய் ஒருபோதும் ஷாப்பிங் செய்ததில்லை போலும் என்று மாட்சுயை வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஜப்பானிய மக்கள் தொகையில் 51% பெண்கள் உள்ளபோதும், உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள பாலின சமத்துவ குறியீட்டில் மொத்தம் 149 நாடுகளில் ஜப்பான் 110 வது இடத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளது. ஜப்பான் பெரும்பாலும் ஆண் ஆதிக்கம் செலுத்தும் சமூகமாக உள்ளதென்பதை காட்டுவதாக இந்த குறியீடு உள்ளது.