டில்லி
மகப்பேறு விடுமுறை முடிந்த பிறகும் பெண்கள் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாடு முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அத்தியாவசிய ஊழியர்கள் தவிர மற்றவர்கள் வீட்டில் இருந்தே தற்போது பணி புரிந்து வருகின்றனர். இது பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பை அளித்துள்ளது.
கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் பெண் பணியாளர்கள் குறிப்பாகப் பாலூட்டும் தாய்மார்களின் நலனுக்காக மத்திய அரசு நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தொழிலாளர் நலத் துறை செயலர்களுக்குக் கடிதம் மூலம் மத்திய அரசு அனுப்பி உள்ளது.
அதில், ” மகப்பேறு கால பலன் (திருத்த) சட்டம் 2017 பிரிவு 5(5)-ன் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட வேண்டும். கொரோனா பெருந்தொற்றின் போது பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் பாதிப்புக்குள்ளாவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால் அவர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.
இதற்காகப் பிரிவு 5(5) குறித்த விழிப்புணர்வைப் பெண் பணியாளர்கள் மற்றும் பணி வழங்குவோர் மத்தியில் ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இப் பிரிவின்படி, தாய்மார்கள் குழந்தை பிறந்து குறைந்தபட்சம் ஓராண்டு வரை வீட்டிலிருந்தே பணியாற்ற ஊக்கப்படுத்த வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.