முகுந்த்வாடி, மகாராஷ்டிரா

கொரோனா முடக்கத்தால் பணி இழந்த ஒரு பெண் மூன்று மாதத்தில் மூவரைத் திருமணம் செய்து நகை மற்றும் பணத்துடன் ஓட்டம் பிடித்துள்ளார்

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள முகுந்த்வாடி பகுதியில் விஜயா அம்ருதே என்னும் 27 வயதுப் பெண் மற்றும் அவருடைய கணவர் ஆகிய இருவரும் வசித்து வந்தனர்.  இருவரும் கொரோனா முடக்கம் காரணமாகப் பணி இழந்தனர்.   இதனால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.   இதையொட்டி வேறு ஒரு தம்பதியினருடன் இணைந்து ஒரு திட்டம் தீட்டி உள்ளனர்.

அதன்படி அவர்கள் திருமணத்துக்குப் பெண் தேடும் இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களிடம் இருந்து ரூ.2.5 லட்சம் கட்டணம் பெற்று விஜயாவை திருமணம் செய்து வைத்துள்ளனர்.   இந்த ரூ.2.5 லட்சம் அவர்களுடைய கட்டணம் மற்றும் திருமணச் செலவுக்காக வசூலிப்பதாகத் தெரிவித்தனர்.  திருமணம் முடிந்ததும் விஜயா நகைகள் மற்றும் பணத்துடன் தலைமறைவாகி விடுவது வழக்கமாகி உள்ளது.

நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் என்பவர் இது குறித்து புகார் அளித்துள்ளார்.   அதன் அடிப்படையில் காவல்துறையினர் விஜயாவை தேடி கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.  விசாரணையில் அவர் தங்கள் திட்டத்தைத் தெரிவித்துள்ளார்.  யோகேஷிடம் இருந்து ஓடிய விஜயா மூன்ற்ஏ மாதத்தில் அதன் பிறகு ராய்கட் பகுதியில் ஒருவரையும் மேற்கு மகாராஷ்டிராவில் ஒருவரையும் திருமணம் செய்து நகைகளுடன் ஓடியது தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.