அலகாபாத்:
ஆராய்ச்சித் துறையிலும் ஆண் ஆதிக்கம் இருப்பதால், நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடிவதில்லை என்ற வருத்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர் பெண் விஞ்ஞானிகள்.
இன்று பெண்கள் எல்லா துறைகளிலும் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். கீழ்மட்டத்திலிருந்து உயர் பதவி வரை கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்.
இருந்தும் பெண்களுக்கே உரித்தான சில பிரச்சினைகள் இன்னும் மாறாத நிலையிலேயே உள்ளது. ஒவ்வொரு மகளிர் தினத்திலும் அவர்களுக்கு புகழ்மாலை பாடினாலும், அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட முடியவில்லை.
இதற்கு விஞ்ஞானிகளும் விதிவிலக்கல்ல என்கிறார் அலகாபாத் ஹரீஸ் சந்திரா ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாக இருக்கும் டாக்டர் அதிதி சென் தே.
கடந்த 2016,2017,2018 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து விருது பெற்றுள்ளார். அப்போது விருது பெற்ற 33 விஞ்ஞானிகளில் இவர் ஒருவர் மட்டுமே பெண்.
தமது அனுபவங்கள் குறித்து டாக்டர் அதிதி சென் தே கூறும்போது, “விஞ்ஞானிகளாக பெண்கள் அதிகம் வராததற்கு காரணம் பெண்கள் அல்ல. இது நமது அமைப்பின் பிரச்சினை.
ஆணாதிக்க கலாச்சாரம் பெண்களை ஒதுக்கி வந்ததும், விஞ்ஞானிகளாக பெண்கள் அதிகம் வராததற்கு ஒரு காரணம்.
இதுவரை 519 பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் 16 பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு, ஆராய்ச்சியிலும் ஈடுபடுவது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு கடினம் என்பதை நான் அறிவேன்.
திருமணமாகி குழந்தை பெற்று விடுப்புக்கு பின் பணிக்கு திரும்பும் பெண்கள், இணையான தகுதியுடைய ஆண்களுக்கு நிகராக ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடவேண்டும்.
விடுப்பில் இருக்கும்போதும் ஆராய்ச்சி குறித்தே படித்துக் கொண்டிருக்க வேண்டும். அதனால் அவர்களுக்கு விடுப்பு எடுத்தும் பயனில்லாத நிலை ஏற்படுகிறது. திறமையுள்ள பெண்கள் விஞ்ஞானிகளாக வந்தாலும், அவர்களால் இந்த பணியில் தொடர முடியாமல் போய்விடுகிறது” என்றார்.
டாடா அடிப்படை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி விதிதா வைத்யா கூறும்போது, “நமது அமைப்பு ஆண்களுக்கு ஆதரவாகவே உள்ளது. பெண்களுக்கு எந்த ஆதரவும் தருவதில்லை. 2015-ம் ஆண்டு சாண்டி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றேன்.
ஆனால், மணவாழ்க்கை, குழந்தை, குடும்பம் என்று ஆனால், பெண் விஞ்ஞானிகள் பெரும் பின்னடைவை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த விருதுக்கான பரிசை அறிவிக்கும் போது, அங்கிருந்தவர்களில் நான் மட்டுமே பெண்” என்கிறார்.