சென்னை: அர்ச்சகர் ஆக விருப்பம் உள்ள பெண்களும், அதற்கான பயிற்சி பெற்று அர்ச்சகர் ஆகலாம் என தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில், மண்டல ஆணையர்களுடன் அமைச்சர் சேகர்பாபு இன்று ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“இந்து சமய அறநிலையத்துறையின் பணிகளை வேகப்படுத்தி, துறையை புதுப்பொலிவுடன் மாற்ற ஆலோசனை நடத்தினோம். திமுக பதவி ஏற்ற நாளில் இருந்து, வெளிப்படைதன்மையுடன் செயல்பட்டு வருகிறது. சில இடங்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது. முக்கிய கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்கிற பதாகை வைக்கப்படும். அதில், தமிழில் அர்ச்சனை செய்பவர்களின் விபரம் இடம்பெறும்.

நூறு நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற திட்டம் செயல்படுத்தப்படும். பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம் உள்ளது. அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு விரைவில் அர்ச்சகராக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு முன்பு கடைபிடிக்கப்பட்ட நடைமுறையில் அர்ச்சகர் நியமணம் செய்யப்படும்.. நியாயமான, நேர்மையான, வெளிப்படைத் தன்மை கொண்ட ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதில் எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.