சென்னை: தமிழகப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.
“தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய (பொன்ராஜ்) ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று விஜய் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி அலுவலகத்திற்கு இன்று மாலை நேரில் வருகை தந்து பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார். அரசியல் விமர்சகர் பொன்ராஜ் என்பவர் அண்மையில் யூடியூப் நேர்காணல் ஒன்றில் தமிழகப் பெண்களை மிகவும் அவதூறாகவும், தரக்குறைவாகவும் விமர்சித்திருப்பதாக அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொன்ராஜ் ஆளும் கட்சியின் ஆதரவாளராகச் செயல்பட்டு வருவதால், தமக்கு யாரும் கடிவாளம் போட முடியாது என்ற மமதையில் அவர் எல்லையை மீறிப் பேசி வருவதாகவும், தமிழ்ப் பண்பாட்டில் போற்றப்படும் பெண்களின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படும் அவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
