ஜெய்ப்பூர்
பெண் ஆர்வலரும் ராஜஸ்தான் பெண்கள் ஆணைய தலைவருமான சுமன் ஷர்மா ஜீன்ஸ் அணிந்த ஆண்களால் பெண்களை பாதுகாக்க முடியாது எனக் கூறி உள்ளார்.
ராஜஸ்தான் மாநில பெண்கள் ஆணையத் தலைவராக உள்ளவர் சுமன் ஷர்மா. இவர் பெண் ஆர்வலரும் ஆவார். நேற்று ஜெய்ப்பூரில் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி ஒரு நிகழ்வ் நடந்தது. இதில் கலந்துக் கொண்ட சுமன் ஷர்மா நிகழ்வில் உரையாற்றினார்.
அப்போது அவர், “பெண்கள் பரந்த மாபுடைய ஆண்களை மிகவும் விரும்புவார்கள். அவ்வாறு வலிமையுள்ள ஆண் தான் பலரின் ஆதர்ச நாயகன். ஆனால் தற்போது அது போல் ஆண்களைக் காண முடிவதில்லை. இடுப்புக் கீழே செல்லும் ஜீன்ஸ் அணிந்த ஆண்களே உள்ளனர். தங்களின் நழுவி விழும் ஜீன்ஸை பாதுகாக்கவே முடியாத போது அவர்களால் தங்களின் சகோதரிகளான சக பெண்களை எவ்வாறு பாதுகாக்க முடியும்?
உடல் கட்டுக் கோப்பு என்பது பெண்களுக்குத் தேவை, ஆண்களுக்கு அல்ல. அது மட்டுமின்றி காதில் தோடு அணிந்த ஆண்கள் பார்க்கப் பெண் போலவே இருக்கின்றனர். நான் யாரையும் கேலி செய்யவில்லை. ஆனால் இது மாற வேண்டும் என சொல்கிறேன். நாம் பரந்த மார்புடைய வலுவான ஆண்களை உருவாக்க வேண்டும். இது குறித்து ஆண்களுக்கு எடுத்துச் சொல்ல நம்மைப் போன்ற தாய்க்குலங்களால் மட்டுமே முடியும்.
பெண்கள் சுதந்திரம் என்னும் பெயரில் கட்டுக்கடங்காமல் செல்வது அவர்களின் குடும்பத்தை மட்டுமின்றி சமுதாயத்தையும் பாதிக்கும். ஆணுக்குப் பெண் சமம் என்பதை போல் பெண்ணுக்கும் ஆண் சமம் தான். இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பது இருவருக்குமே உரிய கடமை ஆகும். இந்த சமத்துவத்தை காப்போம் எனவும் நமது குழந்தைகளுக்கு நாம் ஒரு முன்மாதிரியாக இருந்து ஒரு விழிப்புணர்வுள்ள நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் எனவும் இந்த நாளில் உறுதி கொள்வோம்: என உரையாற்றினார்.