திருப்பூர் ஆத்துப்பாளையத்தில் பிரசாரத்துக்கு சென்ற பாஜக-வினரிடம் GST வரி குறித்து கேள்வி எழுப்பிய சங்கீதா என்ற பெண்ணை தகாத வார்த்தைகளில் பேசி பாஜக-வினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மாநிலத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக-வுக்கு நிகராக உருவகப்படுத்திக் கொண்ட பாஜக இந்த தேர்தல் மூலம் தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக உருவெடுக்க தீர்மானித்துள்ளது.

பாஜக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் அதிக முக்கியத்துவம் இல்லையென்ற போதும் கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் கனிசமான வாக்குகளை வாங்க பாஜக பல்வேறு உத்திகளை கையான்டு வருகிறது.

அந்த வகையில் திருப்பூர் ஆத்துப்பாளையத்தில் இன்று பிரச்சாரம் செய்த பாஜக-வினரிடம் அந்த வழியாக சென்ற சங்கீதா என்ற பெண் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பினார்.

அவரைத் தொடர்ந்து அங்கிருந்த பலரும் மோடி அரசு குறித்து கேள்வி எழுப்பியதை அடுத்து ஆத்திரமடைந்த பாஜகவினர் சங்கீதாவைப் பின்தொடர்ந்து சென்று அவரது கடைக்குள் நுழைந்து அவரைத் தாக்கினர்.

மோடி ஜி-யின் பத்தாண்டு சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்க முடியாத பாஜக கட்சியினர் மோடி அரசு குறித்து கேள்வி எழுப்புபவர்கள் மீது தாக்குதலில் இறங்கியுள்ளது தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.