மதுரை:

பெரியகுளம் அமமுக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அதிமுக எம்எல்ஏ கதிர்காமு மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார். இதன் காரணமாக அவர்மீதுபாலியல் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கதிர்காமு விரைவில் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த  2016-ம் ஆண்டு பெரிய குளம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக  போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டவர் டாக்டர். கதிர்காமு. ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக பிரிந்தபோது, இவர் டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டார். இதன் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்ட தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் டிடிவியின் அமமுக கட்சி சார்பில் மீண்டும் கதிர் காமு போட்டியிடுகிறார்.

இநத் நிலையில், தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் டாக்டர் கதிர்காமு மீது பெரியகுளத்தைச் சேர்ந்த 36 வயது திருமணமான பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் அளித்துள்ள புகாரில், அகடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி  பெரியகுளத்தில் உள்ள கதிர்காமு மருத்துவமனையில் தன்னை  கதிர்காமு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை வீடியோவாக எடுத்து வைத்துள்ள அவர்,  தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

இளம்பெண்ணின்  புகாரின்பேரில் டாக்டர் கதிர்காமு மீது ஐபிசி 417 (ஏமாற்றுதல்), 376 (பாலியல் பலாத்காரம்), 506(1) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேற்கண்ட பிரிவுகள் ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகள் என்பதால் கதிர்காமு கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே கதிர்காமு சம்பந்தப்பட்ட காணொலியும் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது.