தன்னை பிரதமர் மோடி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கோரி, டில்லியில் ஒரு பெண்மணி போராட்டம் நடத்தி வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் ஓம் சாந்தி சர்மா என்ற பெண்மணி. நாற்பது வயதான இவர் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், மோடியின் புகைப்படத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார். மோடி தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் இவரது கோரிக்கை.
இது குறித்து சாந்தி கூறுகையில், ”எனது முதல் திருமணம் முறிந்துவிட்டது. அதற்குப் பிறகு, என்னைத் திருமணம் செய்ய பலர், முன்வந்தனர். ஆனால் நான் மறுத்துவிட்டேன்.
பிரதமர் மோடி தனியாக இருக்கிறார். அவருக்கு நான் சேவை செய்ய விரும்புகிறேன். ஆகவே அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்.
ஆனால் மோடியை சந்திக்க எனக்கு அனுமதி தர மறுக்கின்றனர். நான் ஏதோ பேராசைப்படுவதாக மக்கள் என்னைப் பார்த்து சிரிக்கின்றனர். எனக்கு ஏராளமான விளை நிலங்கள் இருக்கின்றன. அவற்றை விற்று, மோடியை நான் நன்றாக கவனித்துக்கொள்வேன். மோடி என்னை வந்து சந்திக்கும் வரை ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடர்வேன்” என்கிறார் சாந்தி.
சாந்தி தற்போது அங்குள்ள குருத்வாரா கோயில்களுக்குச் சென்று சாப்பிட்டுக் கொள்கிறார். பொதுக் கழிவறையைப் பயன்படுத்திக்கொள்கிறார்.
கடந்த செப்டம்பர் 8-ம் தேதியிலிருந்து சாந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். செய்தியாளர் ஒருவர் ஏதேச்சையாக இவரிடம் பேச்சுக்கொடுத்தபோதுதான் விசயம் தெரிந்திருக்கிறது.
சாந்திக்கு முதல் கணவர் மூலம் 20 வயதில் மகள் இருக்கிறார்.