வுகாத்தி

கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோவில் அருகே ஒரு தலை வெட்டபட்ட பெண் பிணம் கிடைத்துள்ளது.

அசாம் மாநில தலைநகர் கவுகாத்தி அருகே அமைந்துள்ள நிலாச்சல் மலையில் காமாக்யா அம்பாள் கோவில் உள்ளது.   இது அம்பாளின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.   மிகவும் பழமையான இந்த கோவிலில் வரும் 22 ஆம் தேதி முதல் வருடாந்திர திருவிழா தொடங்க உள்ளது.    அம்பாபச்சி திருவிழா என அழைக்கப்படும் இந்த விழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கமாகும்.

நேற்று மாலை சுமார் 5.30 மணிக்கு நிலாச்சல் மலை படிக்கட்டில் ஒரு பெண் பிணம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது.   உடனடியாக அங்கு விரைந்த காவல்துறையினர் தலை துண்டிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடலை கண்டனர்.   அந்த பெண் சுமார் 40 வயது உடையவராக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

 

தலையற்ற அந்தப் பெண்ணின் உடல் அரை நிர்வாணமாக கிடந்துள்ளது.   அந்த சடலத்தின் அருகே மண் விளக்கு, மண் பானை, பூஜையில் பயன்படுத்தப்படும் சிவப்பு சரடு,  ஒரு பிளாஸ்டிக் பாட்டில், ஒரு ஸ்டீல் டம்பளர் மற்றும் ஒரு பிளாஸ்டிக் கை விசிறி கிடந்துள்ளது.   இவை அனைத்தும் பூஜைக்கான பொருட்கள் எனவும் அந்த பிளாஸ்டிக் பாட்டிலில் விளக்கு ஏற்ற எண்ணெய் கொண்டு வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ஆனால் அந்த உடலில் மற்றும் சுற்றுப்புறங்களில் அதிக ரத்தக் கறை இல்லை.   அந்த பகுதியின் சுவர் மற்றும் சடலத்தின் மேல் இருந்த துணி ஆகியவற்றில் சிறிய அளவில் இரத்தக்கறைகள் காணப்பட்டுள்ளன.   அத்துடன் கடத்தல் புகார் மற்றும் பெண்ணின் உடலில் காயங்கள் இல்லாததால் அவருக்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டு கொலை நடந்திருக்கலாம் என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இங்குள்ள தடயங்களை பார்க்கும் போது இது நரபலிக்கான கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.    நரபலிக்கு பிறகு சடங்குகளை செய்ய சுடுகாட்டுக்கு கொலை செய்தவர் சென்றுள்ளாரா என்பதை கண்டறிய அருகில் உள்ள சுடுகாடுகளுக்கு காவல்துறையினர் சென்று சோதனை இட்டு வருகின்றனர்.  பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.