Woman gets 7-year jail for false gangrape complaint
கணவரும், அவரது சகோதரர்களும் கூட்டாக சேர்ந்து தன்னை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக பொய்ப் புகார் அளித்த பெண்ணுக்கு, ஹரியானா நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஹரியானா மாநிலம் ரோடாக்கில் வசித்து வரும் மீனாட்சி (28) என்ற பெண் கடந்த 2010ஆம் ஆண்டு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், காரில் தனக்கு லிப்ட் கொடுத்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள், கூட்டாக சேர்ந்து தம்மை பாலியல் வன்புணர்ச்சி செய்து விட்டதாகவும், அவர்களில் ஒருவருக்கே தம்மை நிர்ப்பந்தித்து திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். திருமணத்திற்கு பின்னரும் கணவருடன் அவரது சகோதரர்களும் சேர்ந்த தம்மை பல முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் அவர் தமது புகாரில் கூறியிருந்தார். இதுதொடர்பான வழக்கு ரோடாக் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது, மீனாட்சி அளித்த புகார்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்பதும், பொய்யான ஆதாரங்களை அவர் சமர்ப்பித்திருப்பதும் தெரிய வந்தது. இதனால், மீனாட்சியால் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை வழக்கில் இருந்து விடுவித்த நீதிபதி ரித்து ஒய்.கே.பெல், மீனாட்சியிடம் விளக்கம் கேட்டிருந்தார். அதற்கு மீனாட்சி அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி நீதிபதி நிராகரித்தார். இதனிடையே, இதுபோன்று ஆண்களை பழிவாங்குவதற்காக சட்டத்தை தவறாக பயன்படுத்தும் பெண்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிபதியை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து பொய்ப்புகார் அளித்தற்காக மீனாட்சிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, ரூ10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.