டில்லி:

“மத்திய அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்கள், தங்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள்  நிகழ்ந்தால், அதுபற்றி இணையதளம் மூலமாக புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம், பெண்கள் ரகசியமாக புகார் அளிக்க வாய்ப்பு ஏற்படும்” என்று மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

தற்போது மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் சீண்டல் தொல்லை ஏற்பட்டால் அது குறித்து உயர் அதிகாரிகளிடம் நேரில் புகார் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது.  தவிர அனைத்து அரசு அலுவலகங்களிலும் பெண் ஊழியர்களை உள்ளடக்கிய மகளிர் தீர்வு மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

ஆனால், இதுபோன்ற முறையில் புகார் தெரிவித்தால்,  சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர் விவரம் வெளிப்படையாகத் தெரிய வரும். இதனால் வெளிப்படையாக புகார் அளிக்க சில பெண்கள் தயங்குவதாக ஒரு கருத்து நிலவுகிறது.

மேலும்,  இணைய தளம் மூலமாக புகார் அளிக்கும் வசதி இருந்தால், தகவல்களை ரகசியமாக பாதுகாக்க முடியும் என்பதால் பெண்கள் தயக்கமின்றி புகார் அளிப்பார்கள் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், “மத்திய அரசு பெண் ஊழியர்கள், பாலியல் சீண்டல் குறித்து இணையம் மூலம் புகார் அளிக்கும் வசதி விரைவில் செய்து தரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ஆன்லைன் மூலமாக இதுபோன்ற புகார் தெரிவிக்கும் வசதி,  மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதள முகவரியில் விரைவில் ஏற்படுத்தித் தரப்படும்.  இதற்காக மத்திய அரசு கடந்த மூன்று  வருடங்களாக தீவிரமாக செயலாற்றி வந்துள்ளது.

ஆன்லைனில் புகார் தெரிவிக்கக்கூடிய வசதியை தொடங்குவதற்கு, மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையத்தின் ஒப்புதலைப் பெற மகளிர் அமைச்சகம் காத்திருக்கிறது. ஒரு மாதத்துக்குள் இந்த அனுமதி கிடைத்து, இணையதள சேவை தொடங்கி வைக்கப்படும்.

ஆன்லைனில் பெறப்படும் இந்தப் புகார்கள், பின்னர் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

பல்வேறு அமைச்சகங்களின் கீழ் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் இருந்து அதிக அளவில் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்கள் வந்தன. இதையடுத்து, கடந்த  வருடம் அக்டோபர் மாதத்தில், இந்தப் புகார்களைத் தெரிவிக்க ஆன்லைன் வசதியை ஏற்படுத்த   மத்திய மகளிர் அமைச்சகம் முடிவு செய்தது.

ஏற்கெனவே, கடந்த ஒரு வருடமாக, மின்னணு முறையிலான புகார் பெட்டி வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இனி  ஆன்லைனில் புகார் தெரிவிக்கும் நடைமுறையும் அதே முறையில் சிறப்பாக செயல்படுத்தப்படும்” என்றார்.

மேலும் அவர், “பெண்கள் தெரிவிக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அலுவலகங்களில் ஆண் –  பெண் இருபாலருக்கும் ஒரே கழிவறை இருப்பது  கூட பாலியல்ரீதியான துன்புறுத்தல்தான் ஆகவே இரு பாலருக்கும் தனித்தனி கழிவரைகள் அவசியம்” என்றும் மேனகா காந்தி தெரிவித்தார்.