பிரிடோரியா, தென் ஆப்ரிக்கா

தென் ஆப்ரிக்காவில் பிரிடோரியா மாகாணத்தில் கவ்டெங் பகுதியில் ஒரு பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றுள்ளார்.

தென் ஆப்ரிக்க நாட்டில் பிரிடோரியா மாகாணத்தில் உள்ள கவ்டெங் பகுதியைச் சேர்ந்த பெண் கோஸிம் தாமரா சிட்டோல் கர்ப்பம் தரித்தார்.  இவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது இவர் வயிற்றில் அதிக அளவில் குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது.   இவருக்கு ஸ்கேன் செய்த போது இவர் வயிற்றில் 8 குழந்தைகள் இருந்தது தெரிய வந்தது.   வயிறும் மிகவும் பெரியதாக இருந்தது.

இவருக்கு 7 மாதம் 7 நாட்கள் ஆன போதே பிரசவ வலி ஏற்பட்டது.  கடண்டஹ் 7 ஆம் தேதி பிர்டோரியா சி செக்‌ஷன் என்னும் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் 10 குழந்தைகள் பிறந்துள்ளன.  ஸ்கேனில் 8 குழந்தைகள் மட்டுமே தெரிந்த நிலையில் 10 குழந்தைகள் பிறந்தது ஆச்சரியம் அளித்தது.  இதில் 7 ஆண் குழந்தைகள் 3 பெண் குழந்தைகள் ஆவார்கள்.

அந்த பெண்ணின் கணவர் இது குறித்து, “என் மனைவியின் மகப்பேறு எளிதாக இல்லை. பிரசவ காலத்தில் கடும் கால் வலி மற்றும் நெஞ்சு எரிச்சலால் கடுமையாக அவதியுற்றார். எங்களுக்கு வயிற்றில் உள்ள குழந்தை எல்லாம் உயிருடன் இருக்குமா? அதிகமான குழந்தை இருப்பதால் அத்தனை குழந்தைகளும் உயிருடன் இருப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். கடவுளிடம் செய்த பிரார்த்தனையின் பலனாய் 10 குழந்தைகள் பிறந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

அந்த 10 குழந்தைகளும் தற்போது ஆரோக்கியமாக உள்ளன.  ஏற்கனவே இவர்களுக்கு 6 வயதில் இரட்டை குழந்தைகள் உள்ளதால் மொத்தம் 12 குழந்தைகள் உள்ளனர். ஒரு பெண்ணுக்கு  ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்ததை மருத்துவர்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற விண்ணப்பித்துள்ளனர்.  ஏற்கனவே 9 குழந்தைகள் பிறந்தது உலக சாதனையாக உள்ளது.