சுற்றிலும் சிங்கங்கள் …  நடுக்காட்டில்  பெண்ணுக்குப் பிரசவம்..

குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் வனப்பகுதியில் உள்ள பாகவா கிராமத்தைச் சேர்ந்த அஃப்சனா ரபீக் என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

பிரசவ வலி ஏற்பட்ட அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு ஒரு ஆம்புலன்ஸ் , அருகேயுள்ள கிர்-கட்கா மருத்துவமனைக்குச் சென்றது.

அப்போது இரவு 10.30 மணி.

நடுக்காட்டில் ஆம்புலன்ஸ் சென்றபோது, சாலையின் குறுக்கே சில சிங்கங்கள் ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்தன.

உடனடியாக அவை நகர்வதாகத் தெரியவில்லை.

பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமானது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

நல்ல வேளையாக அந்த ஆம்புலன்சில், கர்ப்பிணி பெண்ணின் தாயாரும், இன்னொரு பெண்ணும் துணைக்கு வந்திருந்தனர்.

“வலியால் துடித்த கர்ப்பிணி’’ஆம்புலன்ஸ் ஏன் வழியில் நிற்கிறது?’’ எனக் கேட்டுள்ளார்.

சாலையில் சிங்கம் நிற்கும் தகவலை சொன்னால், அவர் அதிர்ச்சி அடைந்து, விபரீதம் நிகழ்ந்து விடும் என்று அஞ்சிய ஓட்டுநர், மவுனமாக இருந்துள்ளார்.

ஆம்புலன்சை சிங்கங்கள் வட்டமடித்துக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் ஆம்புலன்சிலேயே அந்த பெண் , அழகான பெண் குழந்தையைப் பெற்றுள்ளார்.

சிங்கங்கள், தங்கள் விளையாட்டை முடித்துக் கிளம்பிய பின்னரே,ஆம்புலன்சை நகர்த்த முடிந்தது.

ஒருவழியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

– ஏழுமலை வெங்கடேசன்